fbpx
Homeதலையங்கம்தேவையில்லாத விஐபி தரிசனம்!

தேவையில்லாத விஐபி தரிசனம்!

கோவில்களில் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. முக்கிய கோவில்களில் பல்லாயிரம் பக்தர்கள் திரண்டு பொது சாமி தரிசனம் செய்ய நீண்ட கியூவில் நிற்பார்கள்.

ஆனால் 50 ரூபாய், 100 ரூபாய் என கட்டணம் செலுத்தி அதற்கான வழியில் போய் பலரும் சாமி தரிசனத்தை விரைவாக முடித்து திரும்புவர். கியூவில் வெகுநேரம் காத்திருந்து ஏழை, எளிய பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இது இப்படியிருக்க இடையிடையே விஐபி தரிசனம் வேறு நடக்கும். அவர்கள் நேராக சென்று சாமி தரிசனத்தை சில நிமிடங்களில் முடித்து விடுவர். விஐபிகள் வரும்போது மற்றவர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டு பெரும் இடையூறு ஏற்படும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: ஆலயங்களில் அனைவரும் சமம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். விஐபி தரிசனம் என்பது ஏதோ இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆரம்பித்தவை அல்ல.
அதை படிப்படியாக குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 20 ரூபாய் கட்டண தரிசனத்தின் மூலம் ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்றாலும், அந்த கட்டண தரிசனம் தேவையில்லை என்று முடிவு எடுத்து, அந்த வருமானத்தை திருக்கோயிலின் இதர வருமானத்தில் ஈடுசெய்து கொள்ளலாம் என்று ரத்து செய்துள்ளோம்.

நாளடைவில் படிப்படியாக எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் விஐபி தரிசனத்தை நிறுத்திட முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

சிறப்பு கட்டண தரிசனத்தை, விஐபி தரிசனத்தை படிப்படியாக குறைப்பதற்கு முழுமையாக ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இறைவனை வழிபடுவதிலும் பாகுபாடு தேவையா? வருமானத்திற்காக கட்டணம் வசூலிக்கலாமா? விஐபி தரிசனம் தேவையா? என அடுக்கடுக்கான கேள்விகள் காலம்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. கட்டண தரிசனம், விஐபி தரிசனத்தை இந்து அமைப்புகளே எதிர்க்கின்றன.

படிப்படியாக இந்த நடைமுறை ஒழிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்து இருக்கிறார். இது நம்பிக்கை தருகிறது, வரவேற்கத் தக்கது.
சிறப்பு கட்டண தரிசனம், விஐபி தரிசன முறை வேண்டாம், வேண்டவே வேண்டாம்!

படிக்க வேண்டும்

spot_img