நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எந்த அளவிற்கு விமர்சனம் செய்யப்பட்டது என்பதை விட, திமுக எந்த அளவிற்கு பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பது தான் அரசியல் விமர்சகர்களின் தற்போதைய விவாதமாக மாறி இருக்கிறது. பாஜகவின் இந்த மடைமாற்றப் பேச்சுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.
ஆம், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் என நீண்டு கடைசியில் பிரதமர் மோடி வரை… அவர்கள் பேசியதை அலசிப் பாருங்கள். ஆவேசமாக பேசிய ராகுலுக்கு பதில் கூறும் இலக்கில் இருந்து விலகி, திமுகவை விமர்சிப்பதையே தங்கள் இலக்காக மாற்றிக் கொண்டு விட்டனர் என்பதை காணலாம்.
பாஜகவிற்கு மற்ற மாநிலங்கள் எந்த அளவிற்கு சவாலாக இருக்கும் என்பதை கண்டிப்பாக கூறிவிட முடியாது. ஆனால் நிச்சயம் தமிழ்நாடு கடும் சவாலாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இங்கு இதுவரை ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தான். அவர்கள் பாஜகவை வளரவே விடவில்லை. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் தந்தை வழியில் தானே ஆட்சி செய்கிறார்?
பிரதமர் மோடி முதல்முறையாக 2014 தேர்தலில் வெற்றி பெற்ற போது, தமிழ்நாட்டில் மொத்தமாக 37 இடங்களில் அதிமுகவே (தனித்து போட்டியிட்டு) பெற்றி பெற்றது. வெறும் 2 இடங்களில் தான் பாஜக கூட்டணி வென்றது. ஜெயலலிதா அப்போது எழுப்பிய முழக்கம் மோடியா அல்லது இந்த லேடியா என்பதை நிச்சயம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
ஆனால் 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக வென்றது. ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வென்றது. பாஜக எங்குமே வெற்றி பெறவில்லை.
மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியை பிடித்த பாஜகவால், அதுவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தும் இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தமிழ்நாட்டில் படுதோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது.
இதுதான் பாஜகவிற்கு திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை கொண்டு வந்துள்ளது. மறுபுறம் தேசிய ஊடகங்கள் எடுத்த சர்வே கூட திமுக கூட்டணி தான் 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெல்லும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுகவை பாஜக டார்கெட் செய்வது கடந்த சில மாதங்களில் அதிகமாகி உள்ளது.
இதுஒருபுறம் எனில், காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக வலுவுடன் இருப்பது திமுக. மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்ததில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு.
இப்போது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ஆர்ஜேடி, டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி… இதுதவிர இடதுசாரிகள் ஆகியவை காங்கிரஸ் பின்னால் அணி திரள ஸ்டாலின் தலைமையிலான திமுக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுவும் திமுக மீதான கோபத்தை பாஜகவிற்கு அதிகப்படுத்தி இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 2019 போல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிச்சயம் இருக்காது. எதிர்க்கட்சிகள் பல ஓரணியில் திரண்டு உள்ளன. கிட்டத்தட்ட 26 கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன.
இதனால் காங்கிரஸை தாண்டி திமுகவையும் டார்கெட் செய்து பாஜக கடும் பதிலடி கொடுத்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி வரை பாஜகவின் அத்தனை மூத்த தலைவர்களும் திமுகவை சரமாரியாக அட்டாக் செய்துள்ளனர். ராகுல் காந்தியைகூட இந்த அளவிற்கு அவர்கள் விமர்சிக்கவில்லை.
நேற்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் குரலால் பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.திமுக எம்பிக்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பாஜக பதிலடி கொடுத்தது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சகட்டமாக தமிழிலேயே பதிலடி கொடுத்தார். அடுத்தடுத்து பாஜகவின் இலக்கே திமுக தான் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகிறது.
2024 தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு கடும் சவால் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக பாஜக என்னென்ன அஸ்திரங்களை கையில் எடுக்கப் போகிறதோ? அதையெல்லாம் எதிர்கொள்ள திமுகவும் தயாராகத் தான் இருக்கிறது.
போட்டி தொடங்கி விட்டது. நடுவராக இருந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்போவது மக்கள் தானே!



