தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதும் இதற்கு மரியாதை செய்யும் வகையில் அனைவரும் எழுந்து நிற்பதும் வழக்கமான ஒன்று.
அண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டுமா? என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்தார்.
அதோடு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனும் அரசாணையை கடந்த 17.12.2021 அன்று வெளியிட்டார்.
தற்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. இதுகுறித்து அவர்களிடம் ஒரு தரப்பினர் விளக்கம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ஒரு வங்கி அதிகாரி வாதிட்டார்.
இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்படவே, வங்கியின் உயர் அதிகாரிகள் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்து வாக்குவாதத்தை முடித்து வைத்தனர்.
ஆனாலும், இது தொடர்பான தமிழக அரசின் அரசாணை குறித்து, தமிழகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது வியப்பைத் தருவது மட்டுமல்ல கண்டனத்துக்கும் உரியது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்துவதில் சர்ச்சை ஏற்படக்கூடாது என்பதற்காக உடனடியாக தமிழக அரசு மீண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்… என்ற பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.
அனைத்து கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை ஏற்படக்கூடாது. அனைத்துத் துறை அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
நிகழ்ச்சிநிரல் தயாராகும் போதே தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடப்போவது யார்? என்பதையும் அனைவரும் அப்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதையும் விழா ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடரக்கூடாது.



