சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அளித்த தேநீர் விருந்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கமாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் ஆளுநர் சார்பில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும்.
சென்னை ராஜ்பவனில் நடக்கும் இந்தத் தேநீர் விருந்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்பதால் கடந்த குடியரசு தின விழா தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளவில்லை.ஆனால், இப்போது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார்.
இந்தச் சூழலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக ஆளுநர் மாளிகை சென்ற முதல்வரை ஆளுநர் ஆர்.என்.ரவி உற்சாகமாக வரவேற்றார். இருவரும் பேசியபடியே நடந்து வந்தனர்.
முதல்வருடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல திமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக கட்சி எம்எல்ஏக்களும் இதில் கலந்து கொண்டனர். ஆனால், இதில் எல்லாவற்றையும் விடக் கவனம் ஈர்த்தது என்னவோ அதிமுக தலைவர்கள் தான்.
ஆளுநர் அளித்துள்ள இந்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அவரது ஆதரவாளர்கள் வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது பேசும் பொருளாகி விட்டது.
அதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதல்வராக இருந்த சமயத்தில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, இந்த முறை மிஸ் ஆனார்.
அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் அவர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் விலகி நிற்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இது, அதிமுகவினர் இடையே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி அது ஆளுநர் விருந்தில் எதிரொலித்திருக்கிறதோ என அதிமுக தொண்டர்கள் தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பதில் ஏதோ அரசியல் மர்மம் உள்ளதாகவே கணிக்கப்படுகிறது. அந்த மர்மம் விலகும்போது விலகட்டும்.
ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே உறவு மேம்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லதே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை!



