இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே சுருக்கியுள்ளது. உலகில் எந்த பகுதியில் உள்ளவரையும் எளிதில் தொடர்புகொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.
ஆனால், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. கொத்தடிமையாக்கப்பட்டு துயரத்தில் உழல்கிற மனிதர்கள் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்துக் கடந்துவிடுகிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தொடர்ந்து கொத்தடிமை முறையில் சிக்கிக்கொள்ள என்ன காரணம்; அதனைத் தடுக்க என்ன வழி? என்ற விரிவான விவாதம் இதுவரை உருவாகவில்லை.
அதுபோன்ற விவாதம் பொதுத் தளத்தில் உருவாகும் போதுதான் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கும் செயல்பாடு தீவிரமாக்கப்படும். அப்படி ஒரு விவாத சூழல் நம்மிடையே உருவாகவில்லை என்றால், இப்போதும் எப்போதும் புதிய கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்.
வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகள் குறிப்பாக வட மாநிலக் குழந்தைகளை குறி வைத்து கொத்தடிமைகளாக மாற்ற ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது வேதனை தரும் செய்தியாகும்.
தற்போது கொத்தடிமைகள் முறையை ஒழிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த ஆண்டில் 1,144 பேர் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் மறுவாழ்வு தொகையாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கூட கொத்தடிமைகள் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சகமனிதன் மீதான மானுட சுரண்டலாக சமூகத்தில் நிழலாடி கொண்டிருக்கும் கொத்தடிமை தொழில்முறை முற்றிலும் ஒழிக்க பட வேண்டியதாகும்.
இதை ஒழித்து தனிமனித உரிமைகளை காக்க அரசுக்கு துணைபுரிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு நாளில் சமத்துவ சமூகம் அமைக்க உறுதியேற்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
21ம் நூற்றாண்டிலும் கொத்தடிமை முறை இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நடைமுறைக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. குழந்தை தொழிலாளர் முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை விட தீவிரமான விஷயம் கொத்தடிமை முறை.
இதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு கொத்தடிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அம்முறை தலைதூக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். மனிதர்களை கொத்தடிமைகளாக அமர்த்தும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டியதும் அவசியம்.
எங்காவது கொத்தடிமைகள் இருந்தால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அதனை உரிய அதிகாரிகளுக்கோ காவல் துறைக்கோ தகவல் தர வேண்டும்.
அரசு அலுவலர்கள் தொடர்ந்து கொத்தடிமை முறைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும் இன்னும் தீவிரம் காட்ட வேண்டிய நேரத்துக்காக காத்திருக்காமல் இப்போதே களமிறங்க வேண்டும்.
அப்போது தான் கொத்தடிமை முறையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்ட முடியும்.