இஸ்ரேல் ஹமாஸ் படைக்கு இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்கிறது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் காசா பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவுக்குள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் படையெடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அரபு நாடுகள் ஹமாஸ் படைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் உலக வல்லரசான அமெரிக்கா எப்போதும் போல இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் எப்போது போர் மேலும் விரிவடையுமோ என்ற நிலைதான் அங்கு காணப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது ஈரான் கூறியுள்ள கருத்து மிக முக்கியமானது.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தால், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரானின் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுரையாக அல்ல… எச்சரிக்கையாக ஆவேசப்பட்டுள்ளார். இதற்கிடையே ஈரான் இந்த விவகாரத்தில் மற்றொரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா ஏற்கனவே தலையிட்டுவிட்டதாக குற்றச் சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்கா தலையிட்டால் ஈரானும் எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஆக, இந்தப் போர் அந்த பிராந்தியம் முழுக்க பரவுமோ என்ற அச்சம் தான் இப்போது உலக நாடுகளுக்கு இருக்கிறது.
ஐ.நா வலியுறுத்தியும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுக்கிறது. ஹமாஸ் தான் முதலில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. ஹமாஸை ஆக்கிரமிப்பது சரியாக இருக்காது என அமெரிக்கா அறிவுரை கூறியபோதிலும், தொடங்கியது ஹமாஸ், நாங்கள் முடித்து வைப்போம். ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதுவரை உறுதியாக இருந்து வருகிறார்.
இப்படி இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே நடக்கும் போரில் நாளுக்கு நாள் உலக நாடுகளின் தலையீடுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் எங்கே இது அடுத்த உலகப் போரை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
3வது உலகப்போரா? வேண்டவே வேண்டாம்!



