இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் மூலமாக யுபிஐ பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யுபிஐ பயனர்களின் வசதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியைக் கொண்டு வர ஆர்பிஐ அனுமதித்துள்ளது.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுகிறார்கள்.
இந்நிலையில் நாட்டில் யுபிஐ மற்றும் நுகர்வோர் கடன் சந்தையை மேலும் விரிவு செய்யும் நோக்கில் Pre-sanctioned Credit Lines/Loans எனும் கடனை பயனர்கள் பெற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இதன் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கடன் பெற்று யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக வங்கிகள் இந்த புதிய முறையின் கீழ் கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளதாகச் செப்டம்பர் 4-ம் தேதி வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பயனர்களுக்கு இந்த கடன் சார்ந்த விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல் இதற்கான முன் அனுமதியைப் பயனர்களிடமிருந்து யுபிஐ அமைப்புகள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. மேலும் யுபிஐ-இல் வரும் இந்த புதிய வசதி கிரெடிட் கார்டு பயன்பாடு போன்று தான் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆனாலும் அவசரக் காலங்களில் யுபிஐ சேவையில் வரும் இந்த புதிய வசதி கண்டிப்பாகப் பயனுள்ள வகையில் இருக்கும்.
இது வரவேற்கத் தக்க திட்டமே. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் சூப்பர் திட்டம். அதே நேரத்தில் எவ்வித மோசடிக்கும் ஆளாகாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதே யுபிஐ பயனாளர்களின் எதிர்பார்ப்பு!