தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக லூர்து பிரான்சிஸ் (45) பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லூர்துவை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடிவிட்டனர்.
விஏஓவை அலுவலகத்தினுள் புகுந்து வெட்டிக் கொன்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது. விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர். அவர் தான் முன்பு பணியாற்றிய இடங்களிலும் தற்பொழுது பணியாற்றிய இடத்திலும் மணல் கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
மணல் திருட்டு தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக ராமசுப்பிரமணியன், அவரது உறவினர் மாரிமுத்து ஆகிய இருவரும் தற்போது கைதாகி உள்ளனர்.
இந்த கொலை காவல்துறைக்கு விடப்பட்ட ஒரு சவாலாகும். சட்டம்& ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. நேர்மையான…துணிச்சலான அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த கொலை மிகமிகக் கண்டிக்கத்தக்கது.
லூர்து பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இதற்கு நிதி நிவாரணம் மட்டுமே தீர்வாக முடியாது. லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதும் தமிழ்நாட்டில் இதுபோன்ற மணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளைகளை அறவே தடுத்து நிறுத்துவதும் தான் உயிரிழந்த லூர்து பிரான்சிஸுக்கு அரசு செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
நாட்டின் கனிம வளத்தை பாதுகாக்கும் பணியில் உயிரிழந்திருக்கிறார், லூர்து பிரான்சிஸ். அவருக்கு வீர வணக்கம்!



