fbpx
Homeதலையங்கம்ரயில் பயணிகளின் பாதுகாப்பில் மெத்தனம்!

ரயில் பயணிகளின் பாதுகாப்பில் மெத்தனம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி மென்பொறியாளர் சுவாதி என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்தின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி அமர்வு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, தற்போதைய தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமீபத்தில் கூட ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டதுடன், குற்றச் சம்பவங்கள் நடைபெற சாதகமான இடமாக ரயில் நிலையங்கள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்து விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024 -25-ம் நிதி ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ரயில்வேதுறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் ரயில்வே நிர்வாகத்தின் அக்கறையின்மையையே காட்டுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுவதால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாக, ரயில்வேதுறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இது போன்ற விஷயங்களுக்கு நிதியைக் காரணம் காட்டக் கூடாது என்றும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், அதற்கான கால அட்டவணையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் ரயில்வேதுறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

ரயில்நிலையங்களில் கேமரா பொருத்த நிதி இல்லை என்ற காரணத்தை உயர்நீதிமன்றத்தில் கூச்சமின்றி தெரிவித்து இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
முதியோருக்கு வழங்கிய கட்டண சலுகையைக் கூட ரத்து செய்து கோடிக்கணக்கில் வருமானத்தை குவித்து வரும் ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தராதது ஏன்? பயணிகள் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது.

நீதிமன்றம் தலையிட்டால் தான் காரியம் நடக்கும் என மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். பிறகு எதற்கு அரசு? எதற்கு ரயில்வே அமைச்சர்? எதற்கு ஐஏஎஸ் செயலாளர்கள்? பொதுமேலாளர்கள்?

சுவாதியின் கொடூர கொலை நடந்து ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

குறைந்தபட்சம் நீதிமன்ற உத்தரவுகளையாவது அதிகாரிகள் நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும். உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் கேமராக்களை பொருத் துங்கள்.

மெத்தனம் வேண்டாம்!

படிக்க வேண்டும்

spot_img