fbpx
Homeதலையங்கம்தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி- உ.பி.க்கு இன்னொரு நீதியா?

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி- உ.பி.க்கு இன்னொரு நீதியா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட சில தகவல்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியும் வேதனையையும் தருவதாக இருந்தது.

ஒன்றிய அரசால் தமிழ்நாடு நிதித் துறையில் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப் படுகிறது என்பதை அவர் ஆதாரத்தோடு புட்டுப்புட்டு வைத்தார். நிதியமைச்சரின் தெளிவான விளக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒன்றிய அரசின் நேரடி வரி விதிப்பில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது. ஆனால், அந்தப் பங்களிப்பிற்கு நிகராக நாம் வரி பகிர்வினை பெற்றிருக்கிறோமா என்றால்…இல்லை, இல்லவே இல்லை.

உதாரணத்திற்கு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக நாம் ஒரு ரூபாய் கொடுக்கிறோம்; அதற்கு ஈடாக நமக்கு ஒன்றிய அரசு திரும்பத் தருவது வெறும் 29 காசுகள்தான்.

அதேநேரத்தில், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வசூலித்துக் கொடுப்பது ஒரு ரூபாய் என்றால் ஒன்றிய அரசிடமிருந்து அம்மாநிலம் திரும்பப் பெறுவது எவ்வளவு தெரியுமா? 2 ரூபாய் 73 காசுகள்& ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம்.

உத்தரப்பிரதேச மாநிலம் வரி தந்த பங்களிப்பு 2.24 லட்சம் கோடி ரூபாய். ஆனால், அது ஒன்றிய அரசிடமிருந்து திரும்பப் பெற்ற பகிர்வு 9.04 லட்சம் கோடி ரூபாய். தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி மட்டுமே.

15 ஆண்டுகளாக பங்களிப்பிற்கு நிகராக இருக்கக் கூடிய இந்த நிதி ஒதுக்கீடு, தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணை, இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்று சொல்வோமே… அதைத் தான் ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இது அநியாயம் அல்லவா? அப்பட்டமான துரோகம் அல்லவா?. தமிழ்நாட்டு மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப்பற்றி மக்களிடம் பேசுவதற்கான களம் தயாராகி விட்டது. ஆம், 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் தான். தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கை தோலுரித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதைத் தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசி பூனைக்கு மணி கட்டி இருக்கிறார். இதைப்பற்றி பேசவேண்டியது தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பறிக்கப் போட்டி போடும் எதிர்க்கட்சிகள் உள்பட அத்துணை அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை ஆகும்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்பிக்கள் அரசியல் மாச்சரியங்களை புறந்தள்ளி, ஒன்றிய அரசிடம் இருந்து தேவையான நிதியோடு நீதியையும் பெற்றுத் தர முழக்கமிட வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம். உரிமையை மீட்டெடுப்போம்!

படிக்க வேண்டும்

spot_img