மூன்று நாட்களுக்கு முன் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், இந்தியா சாதி, இனம் என பிளவுபட்டுள்ளது.
கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம். 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம்.
கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைப்பதற்காகவே கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது
என்று தெரிவித்தார்.
ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ்.
இதனை அறியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.
மார்க்ஸியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி ஆளுநர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
விஷமத்தனமாக பேசுவதை ஆளுநர் ரவி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டு ஆளுநர் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அப்படிப் பேசியே தன்னை அடையாளப்படுத்தப் பழகி விட்டார்.
தான் ஆளுநராக இருக்கும் மாநில மக்களுக்கு நற்கருத்துகளை தெரியப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும், மாநில அரசோடு ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும். சனாதன தர்மம் என்றெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது.
உலகத் தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும், அரசியல்வாதி போல சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக்கொண்டு, ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே ஆர்.என்.ரவிக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.
அதனை விடுத்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு தன் இருப்பை காட்டிக் கொள்வது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. தனது போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றிக் கொள்வாரா?
ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்!