fbpx
Homeதலையங்கம்ஆளுநர் விளக்கத்தால் நல்லுறவு மலரட்டும்!

ஆளுநர் விளக்கத்தால் நல்லுறவு மலரட்டும்!

ஜனவரி முதல்வாரத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்திய உரை தான் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என அவர் பேசியதால் தமிழ்நாடே கொந்தளித்துப் போனது.
இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில் இரு வாரங்களுக்கு பிறகு, ஆளுநர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த விளக்கமும் சர்ச்சையாக மாறி உள்ளது. பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்ற சொல்லே இல்லாததால் தான் காசியுடன் தமிழ்மக்களுக்கு உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்றும் இந்த விவாதப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த விளக்கம் இதுவரை ஆளுநரை விமர்சித்து வந்த அரசியல் கட்சித்தலைவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆளுநர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக நீடிக்கிறது. பண்டைய இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற சொல் ஆளப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆளுநரின் விளக்கத்தைப் பார்க்கும்போது அது ஒரு மழுப்பலான பதிலாகத் தான் பார்க்க முடிகிறது. ஏற்கனவே சர்ச்சை தீயாய் சூடேற்றிக் கொண்டிருந்தபோது, பொங்கல் அழைப்பிதழிலும் ஆளுநர் தமிழகம் என்றே குறிப்பிட்டிருந்தார்.

அது ஏன்? என்பதற்கான விளக்கத்தை ஆளுநர் அளிக்கவில்லை. அவரது விளக்கமே திரிபுவாதமாக மாறி மீண்டும் பேசும்பொருளாகி விட்டது.
ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் தவறை உணர்ந்து விட்டதையே அவரது விளக்கம் உணர்த்துகிறது.

அந்த வகையில் அவரது நிலைப்பாட்டை வரவேற்கலாம். மேலும் மோதல் போக்கை நீடிக்காமல் ஆளுநர் தன் விளக்கத்தில் வைத்ததாகக் கூறும் முற்றுப்புள்ளி மீது நாமும் அழுத்தி ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவதே நல்லது.

ஆன்லைன் தடைச்சட்டம், நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக மாற வேண்டும்.

தமிழக அரசோடும் முதல்வரோடும் உருவாகி இருக்கும் மோதல் போக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆளுநரை, தமிழ்நாடே வாழ்த்தும் சூழல் உருவாக வேண்டும். நல்லகாலம் பிறக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img