fbpx
Homeதலையங்கம்ஜனநாயக மாண்புக்கு ஆளுநரால் பங்கம்!

ஜனநாயக மாண்புக்கு ஆளுநரால் பங்கம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நீதிமன்றக் காவலில் காவேரி மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார்.

ஆளுநர் அனுமதி தராதபோதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என முதல்வரால் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டம் மற்றும் நீதிக்கான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படலாம். தற்போது அவர் அமலாக்கத்துறையின் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். இதனால் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார், என அதற்கு காரணத்தை ஆளுநர் தெரிவித்து இருக்கிறார்.

இதுபோன்று முதல்வரின் அனுமதி அல்லது பரிந்துரையின்றி எந்தவொரு ஆளுநரும் அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ஒருவரை நீக்கம் செய்தது இல்லை என்பதும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு என்பது அரிதான ஒன்றாகவே, வழக்கத்துக்கு மாறான மரபுமீறிய நிகழ்வாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

இதனால் தான் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளோடு விவாதத்தை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் பல வழக்குகளில், நீதிமன்றங்கள் ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக இருக்கும் முதல்வர் பரிந்துரை செய்யும் நபரை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும். அவர் பரிந்துரைக்கும் நபரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆளுநர் என்பவர் மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறது.
இதற்கிடையே தான் ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

சட்ட மோதல்கள், சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கட்டும். மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவியின் வழிகாட்டுதலை மற்ற மாநில ஆளுநர்களும் கையில் எடுத்தால் என்னவாகும்?. மாநில நிர்வாகம் சீர்குலையும், மக்கள் பணிகள் முடங்கும். இது தேவையா? என்பதே மக்கள் மனதில் கேள்வியாக விஸ்வரூம் எடுத்துள்ளது.

ஒருவேளை குடியரசுத் தலைவரே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி போல செயல்பட ஆரம்பித்தால் என்னவாகும்? இது நடக்காது; நடக்கவும் கூடாது. ஒருவேளை நடந்து விட்டால்…? என்பதே நாட்டு மக்களின் கவலையாக உருவெடுத்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. மீண்டும் தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் என்பது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

இச்சூழலில் பலதரப்பில் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பால் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தனது உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரோடு ஆலோசிக்கப் போகிறாராம். ஏன், அந்த ஆலோசனையை செய்த பிறகல்லவா அவர் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்க வேண்டும்?

மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே தான் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அரசியலுக்காக எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் இந்திய ஜனநாயகத்தின் மாண்புக்கு பங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே நாட்டு மக்களின் இன்னொரு கவலை.

ஆனாலும் தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. இந்த நிலைப்பாட்டை, ஜனநாயக மாண்பை காக்கும் மரபை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்வாரா?

நம்புவோம். ஜனநாயகம் தழைக்க நல்லதே நடக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img