‘பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்’ என்பது, முழுக்க முழுக்க 1952 இல் முதலமைச்சராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த ‘‘காலை அரை நேரம் மட்டும் படிப்பு, மீதி அரை நேரம் அம்மாணவர்களின் குலத்தொழிலான செருப்புத் தைத்தல், மண்பாண்டம் செய்தல் போன்ற பல கிராமியத் தொழில்களைக் கற்க வேண்டும்` என்ற குலதர்மக் கல்வித் திட்டத்தின் மாற்றப்பட்ட புதிய வடிவமாகத்தான் உருவெடுத்துள்ளது. 75 ஆண்டுகள் கழித்து அதேபோன்றதொரு திட்டத்தை எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. அதனால் தான் அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த திட்டத்தை ஏற்கவியலாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4.1.2024 அன்றே மத்திய அரசுக்கு தெரிவித்து கடிதம் எழுதினார். அதில் விஸ்வகர்மா திட்டத்தின் தற்போதைய வடிவம் ஜாதியைக் காப்பதாகத் தான் அமைந்துள்ளது. அதை ஏற்க முடியாது
என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். திமுகவோடு, பாஜக தவிர அனைத்து பிற கட்சிகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பி உள்ளன.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில்கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப் பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவிபெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்” என்று அக்குழு பரிந்துரை செய்தது. இதனை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசு எடுத்துரைத்தது. ஆனால் மத்திய அரசு இத்திருத்தத்தை ஏற்கவில்லை.
விஸ்வகர்மா திட்டம் என்பது விஷ உருண்டை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மிகச்சரியாக வர்ணித்திருக்கிறார். இந்த திட்டத்தில் தொழில் செய்ய வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி என்று ‘தேனை’யும் இந்த விஷ உருண்டைமீது தடவி கடைவிரித்துள்ளனர்.
மற்ற சமூக இளைஞர்களைப்போல உயர்கல்வி கற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என உயர வேண்டும், பெரும் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணமே வராதபடி விஸ்வகர்மா சமூக இளைஞர்களை தவறாக வழிநடத்தும் திட்டமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
‘விஸ்வகர்மா’ திட்டத்தினை ஏற்க இயலாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, கைவினைஞர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர, தமிழ்நாடு அரசே ஒரு தனித்த தொழில் ஊக்குவிப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது; அதனை நாங்கள் செயல்படுத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.
குலதர்மக் கல்விக்கு இங்கே ஒருபோதும்இடம் இல்லை என்பது தமிழ்நாட்டின் கடந்தகால வரலாற்றைப் படித்தவர்களுக்கு நன்கு புரியும். குலக் கல்வி முறையைக் கொண்டுவந்து , அதன்மூலமாக மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து பதவியைவிட்டு விலகினார் இராஜாஜி & இது தான் அந்த வரலாற்றுச் சுருக்கம்.
எனவே இந்த விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் அல்லது அனைத்து தொழில் புரிவோருக்குமான திட்டமாக திருத்தம் செய்து செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் துணிச்சலான எதிர்ப்பு, மாற்றுத்திட்ட அறிவிப்பு பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்!