fbpx
Homeதலையங்கம்உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி தமிழிலும்… மகிழ்ச்சி!

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி தமிழிலும்… மகிழ்ச்சி!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகள் கிராமப்புற வழக்கறிஞர்கள் பலருக்கு பயன்படாது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்‘’ என தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு அச்சாரமாக, குடியரசுதினத்தை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தின் 1091 ஆங்கிலத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூடின் இந்த நடவடிக்கை மிகமிகப் பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கெனவே 17.07.2019-அன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டுவிட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திட்டம் விரைவில் முழுமையாக நிறைவேற வலுவூட்ட வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட முக்கிய பிராந்திய மொழிகளில் வெளியாக வேண்டும், விரைவில் அந்த நாள் மலரும் என ஏற்கனவே நமது ஆவலை வெளிப்படுத்தி இருந்தோம். அதற்கான காலம் கனியத் தொடங்கி விட்டது. தொடர் நடவடிக்கைகள் தொடரட்டும்.

தலைமை நீதிபதி சந்திரசூடுக்கு பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img