சமீபத்தில் ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியா’ என்ற அமைப்பின் ஒரு பகுதியான “இந்தியாவில் குழந்தை பாதுகாப்பு” என்ற ஆராய்ச்சி குழு ஆய்வொன்று நடத்தியுள்ளது. அதில் அதிர்ச்சி தரும் சில விஷயங்கள் தெரியவந்துள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழ் ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணம் எனப்படுகிறது. குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம்.
நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என அனைத்திலும் வளர்ச்சி அடைந்து, தற்போது 21ம் நூற்றாண்டில் நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் தான், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 குழந்தைகள் ‘குழந்தை திருமணம்’ செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்ற அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதாவது தினமும் 4,400 குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. 20 – 24 வயதிற்குட்பட்ட பெண்களில் 23% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட 3,563 குழந்தை திருமண வழக்குகளில், வெறும் 181 வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் 92%, பெற்ற தண்டனையின் விகிதம் 11% மட்டுமே, என்று அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இந்த அதிர்ச்சிகரமான ஆய்வின் முடிவுகள், சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? உண்மையிலேயே இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறதா? சிறுமிகளின் நல்ல எதிர்காலம் பாதிக்கப்படலாமா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதோடு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் கடும் நடவடிக்கைகள் மூலம் குழந்தை திருமணங்களை கணிசமாக குறைக்க முடியும் என்பதை அசாம் மாநில அரசு நிரூபித்துள்ளது. அம்மாநில அரசு எடுத்த கடுமையான தொடர் நடவடிக்கை காரணமாக குழந்தை திருமணங்கள் 81% குறைந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு மீறினால் தண்டனை நிச்சயம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை திருமணம் அடியோடு ஒழியட்டும்!