Homeதலையங்கம்ஆன்மிக அரசியலா? உச்சநீதிமன்றம் குட்டு!

ஆன்மிக அரசியலா? உச்சநீதிமன்றம் குட்டு!

இந்து பெரும்பான்மைவாத பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்து ராஷ்டிரத்தை அமைக்கப் பாடுபடும் வலதுசாரி தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளவாறு மதச்சார்பற்ற நாடான இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளாக வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் அரசியலில் இருந்து மதத்தை பிரிப்பது தான் இதை தடுப்பதற்கு சிறந்த வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலும் மதங்களும் பிரிந்து, அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகளுக்கு முடிவு ஏற்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உரைகளைக் குறிப்பிட்டு, தொலைதூரப் பகுதிகளிலிருந்தும், மூலை முடுக்கிலிருந்தும் மக்கள் அத்தகைய தலைவர்களின் பேச்சை கேட்க கூடினர் என்று கூறினர்.

“அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சனை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும்.

மற்ற குடிமக்கள் அல்லது சமூகங்களை இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்திய மக்கள் ஏன் உறுதிமொழி எடுக்க முடியாது?’என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் இடித்துரைத்துள்ளது. ஒன்றியங்களிலும், மாநிலங்களிலும் ஆளுகின்ற கட்சிகளும் பிற கட்சிகளும் இதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஆன்மிக அரசியல் வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே நம் நாட்டின் உயரிய தத்துவம். அதனைக் காப்பதே நம் அனைவரது கடமை!

படிக்க வேண்டும்

spot_img