இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது. அதில் ஒன்றிய அரசின் மொத்த நிதி வருமானத்தில், தென்மாநிலங்களின் பங்கு அதிகளவில் இருக்கிறது.
வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பினும், கல்வி, தொழில், சமூக நீதி ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால், ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி செலுத்துவதில் பின்தங்கி இருக்கின்றன. வரி செலுத்துவதில் அம்மாநிலங்களின் பங்கு மிகக்குறைவாகவே இருக்கிறது.
இருப்பினும் ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிபகிர்வில் பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களுக்கே, அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நிதி வருவாயில் பெரும் பங்காற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான நிதியே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “2014-15 நிதியாண்டிலிருந்து 2021-22 வரை, தமிழ்நாட்டிலிருந்து வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்ற தொகை ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், மாநில பகிர்வில் தமிழ்நாடு பெற்ற தொகை வெறும் ரூ.2.08 லட்சம் கோடி தான்.
அதாவது தமிழ்நாடு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், திருப்பி பெறப்படுவது 26 பைசாவாகவே உள்ளது. ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் வரியாக செலுத்திய தொகை ரூ.2.24 லட்சம் கோடியாக இருக்கிற நிலையில், அம்மாநிலம் பெற்ற நிதி ரூ.9.04 லட்சம் கோடி,” என்று தெரிவித்தார்.
இதே நிலைதான் மற்ற தென் மாநிலங்களிலும் உள்ளது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை கடிதங்கள், நாடாளுமன்ற உரைகள் வழியாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பிரதமரை நேரில் சந்தித்து கூறிய போதும், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வெற்று வார்த்தையே பதிலாக கிடைத்துள்ளது.
அதனைக் கண்டிக்கும் வகையில் தென் மாநிலங் கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக நேற்று (7ம் தேதி) டெல்லியின் ஜந்தர் மந்தரில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கர்நாடக அமைச்சரவையே போராட்டத்தை நடத்தியிருக்கிறது. கேரளவில் ஆளும் சிபிஐ (எம்) அரசும் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளது.
தென் மாநிலங்களில் பாஜகவால் காலூன்ற முடியவில்லையே என்ற வெறுப்பில், ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நடந்து வருகிறது. எங்கள் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியே இது
என்று தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தை புறக்கணிக்க வேண்டும் என நினைத்து மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கான நிதியினை ஒன்றிய அரசு நிறுத்துவது அல்லது குறைப்பது என்பது தென் மாநில மக்களை வஞ்சிக்கும் செயல் என்றாலும் அதனைத் தான் தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. அன்றைக்கு அவர் சொன்னது தான் இன்றைக்கும் தொடர்கிறது. ஆம்; தென்மாநில மக்களின் வரிப் பணத்தால் இன்றும் வடக்கு வாழ்ந்து கொழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் போராட்டக் களத்தில் தென் மாநில அரசுகள் ஒவ்வொன்றாக இறங்கி வருகின்றன.
ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல, மாநிலங்கள் மீதான ஒன்றிய அரசின் பாரபட்சம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் அது எதிரொலிக்கும் என்பதை மறந்து விடக்கூடாது!