தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்தாலும் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் சிறுகுறு நடுத்தர தொழிற்கூடங்கள் அதிகம். மின்சார கட்டண உயர்வினால் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் கட்டண உயர்வை தாங்கிக் கொண்டாலும் பீக் ஹவர் கட்டணத்தையும், நிலை கட்டணத்தையும் தாங்க முடியாத சூழல் உள்ளது.24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஜவுளித்துறை போன்ற பல துறை நிறுவனங்களை பீக் ஹவர் நேரங்களில் நிறுத்தி வைக்க முடியாது.
அதேபோல எந்த தொழிலும் சிறப்பாக இல்லாத சூழ்நிலையில் உற்பத்தி குறைப்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாதத்தில் பாதிவேலை நாட்கள் கூட இயங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
இந்த சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் மாதந்தோறும் செலுத்த வேண்டிய நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனைச் செலுத்த முடியாத நிலையில் தான் தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன.
பல நிறுவனங்கள் நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தால் கடன் வாங்கியே செலுத்துகிறார்கள். அவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகளைத் தந்து கொண்டிருக்கிற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முடங்கும்போது வேலை இழப்புகளும் பெருகி கொண்டிருக்கின்றன.
இதே நிலை நீடித்தால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மூடப்படும் அபாயம் இருப்பதாக தொழில்முனைவோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த எதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு பீக் ஹவர் கட்டணம் என்ற கட்டண முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் கைவிட வேண்டும். 5 மடங்கு ஏற்றப்பட்டிருக்கின்ற நிலை கட்டணத்தை உடனடியாக பழைய முறைக்கு மாற்ற வேண்டும்.
இதனை தமிழ்நாடு அரசு செய்தால் மட்டுமே பீக் ஹவர் மற்றும் நிலை கட்டண பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்களை காப்பாற்ற முடியும்.
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலையும் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்.
தேவை விரைவான நடவடிக்கை!