fbpx
Homeதலையங்கம்அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் வழக்கில், கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அரசியல் உள் நோக்கத்தோடு, தொடரப்பட்ட வழக்கு என்றும், எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி எந்த இடத்தில் மேற்கண்டவர்களை அவதூறாக பேசினாரோ அந்த இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சற்றே வித்தியாசமாக அதே நேரத்தில் அனைவரும் வரவேற்கத்தக்க ஒரு உத்தரவைப் பிறப்பித்து இருந்தார்.

இதையடுத்து அதே கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய போது உதயநிதி ஸ்டாலின் பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவித்தேன்.

அதை பத்திரிகை தொலைகாட்சியில் வெளியிட்டுள்ளனர். நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என இருகரம் கூப்பியபடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுமா, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது குமரகுரு மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே இந்த பிரச்சினை இத்துடன் முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யாரும் யாரைப்பற்றியும் அவதூறாகப் பேசக்கூடாது என்பதை மனதிற்கொண்டு குறிப்பாக அரசியல்வாதிகள் மிகக் கவனமாக பேச வேண்டும்.

இதனைத் தான் நீதிபதி ஜெயச்சந்திரன் இடித்துரைத்துள்ளார். அரசியல் காரணமாக அவதூறாக பேசுவது என்பது தமிழ்நாட்டில் அதிகமாக நடந்து இருக்கிறது. பொறுப்பான தலைவர்கள் மீதே அவதூறு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.

அவதூறாகப் பேசிவிட்டு நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு காலத்தை கடத்தி விடலாம் என்று எண்ணாமல் மனசாட்சியோடு பேசுங்கள் என்று தான் நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உறுதி கூறி இருக்கிறார். இந்த வார்த்தைகள் மேடையில் மைக் முன் பேசும் ஒவ்வொருவர் மனதிலும் பதியட்டும்.

பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் இனியாவது எச்சரிக்கையாகப் பேசுவார்கள் என நம்புவோம்!

படிக்க வேண்டும்

spot_img