fbpx
Homeதலையங்கம்சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர்!

சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர்!

முதியோர் இல்லங்கள் இன்று அதிகரித்து இருப்பதற்கு தன்னைப் பெற்ற தாய் & தந்தையரை வெறுத்து ஒதுக்கும் பிள்ளைகளே முதல் காரணமாக இருக்கின்றனர். முதுமை காலத்தில் பெற்றோரை தங்களுடன் வைத்துப் பராமரிப்பது பிள்ளைகளின் கடமை ஆகும். ஆனால் வயதான தாயை ஆட்டோவில் ஏற்றி வந்து சாலையோரம் விட்டுச் செல்லும் கொடுமையெல்லாம் நடந்து கொண்டு தானிருக்கிறது.

முதியோருக்கு போதுமான சட்டப்பாதுகாப்பு நம்நாட்டில் இருக்கிறது. பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு சொத்துரிமை கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு நினைவு கூரத்தக்கது.

விமானப்படை அதிகாரி உள்ளிட்ட மகன்களை நம்பி அவர்களுக்கு அந்த வயதான தந்தை சொத்துக்களை எழுதி வைத்து விட்டார். ஆனால் தந்தையை அவர்கள் பராமரிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடினார் அந்த முதியவர். எழுதிக் கொடுத்தச் பத்திரங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அந்த சொத்துக்களை மீண்டும் தந்தையிடமே வழங்க உத்தரவிட்டது.

தற்போது ஒரு சம்பவம்: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நாத்துசிங் என்பவர், தமக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளை அம்மாநில ஆளுநர் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார். ஏன் அப்படிச் செய்தார்?

இந்த முதியவர், தம் மகனும் மருமகளும் தம்மைச் சரிவர கவனிக்காததால் அவர்களுக்குத் தமது சொத்துகளை எழுதிவைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இப்போது ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.
தமது சொத்துகளைக் கொண்டு அரசாங்கம் ஒரு பள்ளியோ மருத்துவமனையோ திறக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.

இதுபோன்ற எத்தனையோ முதியவர்கள் நாடெங்கும் வேதனையோடு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமுதாயத்தில் நற்பண்புகள் அழிந்து வருவதையே இதுபோன்ற சம்பவங்கள் இடித்துரைக்கின்றன.

கடைசிகாலத்தில் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் சிலர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? தாங்கள் இன்று உயிரோடு இருப்பதற்கும் சிறப்பாக வாழ்வதற்கும் அடித்தளம் இட்டவர்கள் பெற்றோர் தானே, அதனை எப்படி மறக்க முடிகிறது? நெஞ்சில் ஈரமில்லாமல் பெற்றோரை உதாசீனப்படுத்தும் கேவலமான பிறவிகளுக்கு பாடம் கற்பிக்க சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.

பெற்றோரிடம் சொத்து இல்லாவிட்டால் கூட பாதுகாக்க வேண்டியது பிள்ளைகள் கடமை. வேதனை தரும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத படி இன்றைய தலைமுறை பிள்ளைகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோரை கடைசி வரை கண் கலங்காமல் காக்கும் பிள்ளைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். பெற்றோர், தங்களை பாதுகாக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தையோ காவல்துறையையோ அணுகினால் முதியவர்களுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பு அமையும்.

அது உங்களை சமூகத்தில் எவ்வளவு கேவலப்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
முதியோருக்கான சட்டப்பாதுகாப்பு குறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; ஏற்படுத்த வேண்டும். வயதான பெற்றோரை புறந்தள்ளுவதை விட பெரிய பாவம் வேறென்ன இருக்க முடியும்?

படிக்க வேண்டும்

spot_img