மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் அமைவதற்கு கைகொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வது உத்தரப் பிரதேசம். இம்மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 2019 மக்களவைத் தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி இருந்த பாஜகவுக்கு, நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் 33 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
மத்தியில் தனித்து ஆட்சியமைக்காமல் போனதற்கு இம்மாநிலத்தில் பாஜகவுக்கு குறைந்த அளவே கிடைத்த எம்.பிக்களும் ஒரு காரணம். இதனால் அம்மாநில பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது அது விஸ்வரூபமெடுத்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படும் விதம் காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசை விட அமைப்பு பெரியது. தொண்டர்களின் வலி என்னுடைய வலி, அமைப்பை விட யாரும் பெரியவர்கள் இல்லை. தொண்டர்தான் நம்முடைய பெருமை
என்று கேசவ் பிரசாத் மவுரியா பதிவிட்டது, முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சுற்றி ஏதோ நடந்து கொண்டிருப்பதை உறுதி செய்வதாக உள்ளது.
இந்த விவகாரம் டெல்லி பாஜக தலைமை வரை சென்றுள்ளது. உ.பி. பாஜக மாநில கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கேசவ் பிரசாத் மவுரியா தரப்பு பாஜக தலைமையிடம் எடுத்துக் கூறியுள்ளது.
அதுபோல் பாஜக மாநிலத் தலைவர் புபேந்திர சௌத்ரிக்கும் ஆதித்யநாத்துக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. புபேந்திர சௌத்ரியும் டெல்லியில் தனியாக பாஜக தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசி இருக்கிறார். இதனிடையே, யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநரையும், அமைச்சர்களையும் சந்தித்தார். இதனால், உத்தரப் பிரதேச பா.ஜ.க.வில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பாஜக தலைமையும் உ.பி ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அளவில், பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷாவா அல்லது யோகியா என்கிற பேச்சு எழுகிற அளவிற்கு, யோகி ஆதித்யநாத் அலை காணப்பட்டு வந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் அரசியல் புயல் மையம் கொண்டு இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!