2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்டிஏ
& இந்தியா
என்ற அடிப்படையில்தான் போட்டி இருக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது.
இந்தியா, இந்துஸ்தான், இந்துராஷ்டிரம் என வார்த்தைகளை பாஜக கூட்டணி கட்சிகள் உச்சரித்து வந்த நிலையில் அதனையே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களது ஆயுதமாக கையில் எடுத்திருக்கின்றன.
இது பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவர்களே எதிர்பார்க்காத அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஏனெனில் இந்தியா
கூட்டணியின் பெயரை முன்வைத்தே தொடர்ச்சியாக விமர்சனங்களை பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் உச்சமாகத்தான் பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்களிடையே முன்வைத்த விமர்சனம் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அன்னியர்களால் தொடங்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி என ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற பெயரை வைத்து கொண்டனர்; இந்தியன் முஜாஹிதீன்கள் கூட இந்தியா என பெயர் வைத்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பும் இந்தியா பெயரை சேர்த்தது
என இந்தியா
கூட்டணியை பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இப்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியானது, ராணுவ அடக்குமுறைகளால் இந்திய வளங்களை சூறையாடி இந்தியர்களை வேட்டையாடியது.
அது ஒரு அரச பயங்கரவாதம். அதேபோல இந்தியன் முஜாஹிதீன்கள் அமைப்பு என்பது ஒடுக்கப்பட வேண்டிய மத பயங்கரவாத இயக்கம்.
ஆனால் 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு உருவாக்கியிருக்கும் இந்தியா
கூட்டணி அப்படியானது அல்ல என்பது பிரதமர் மோடி அறியாததும் அல்ல. இந்த நாட்டில் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் தேசத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆளுகிற அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணிதான் இந்தியா
என்பது.
இந்தக் கூட்டணி என்பது மத்தியில் ஆளும் பாஜகவை நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கக் கூடியது என்பதும், பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட மெகா கூட்டணி என்பதும் நாடறிந்த விஷயம். இது பிரதமர் மோடிக்கும் தெரியும்.
அப்படியிருக்க, ஜனநாயக வழிப் போராட்டங்களை முன்னெடுக்கிற ஒரு அணியை கொள்ளையடிக்க வந்த அரச பயங்கரவாத கும்பலோடும் ரத்தம் குடிக்கிற மத பயங்கரவாத கும்பலோடும் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் மோடி பேசுவது ஜனநாயக விழுமியங்களை சர்வநாசமாக்கக் கூடியதாகத் தான் இருக்க முடியும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து.
ஜனநாயக யுத்தத்தை அதற்கான யுத்த களத்தில் எதிர்க்காமல் பயங்கரவாத இயக்கங்களைப் போல சித்தரித்து பிரசாரம் செய்வது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் எடுக்கும் யுக்தி.
ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற தேசத்தின் தலைமை அமைச்சரான பிரதமரே, ஜனநாயகம் என்கிற மரத்தின் வேரில் வெந்நீரை ஊற்றுவது போல இப்படிப் பேசுவது என்பது எந்த வகையில் நியாயம்? – இது தான் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்வி.
எதிர்க்கட்சிகள் இல்லை என்றால் எப்படி நாட்டில் ஜனநாயகம் தழைக்கும்? அரசின் குறைகளைத் தட்டிக்கேட்க எதிர்க்கட்சிகள் இல்லை என்றால் என்ன மிஞ்சும்? சர்வாதிகாரம் தானே? அதனை ஒருபோதும் இந்தியா விரும்பாது; ஏற்கவும் செய்யாது.
நாட்டின் பிரதமரே, எதிர்க்கட்சிகளை தீவிரவாத அமைப்புகளோடு ஒப்பிடுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல; மரபும் அல்ல!