fbpx
Homeதலையங்கம்நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக?

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக?

மத்திய அரசு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் கூட்டியுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இந்தத் தகவலை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தொடரில் ஐந்து அமர்வுகள் இருக்கும் எனவும் அர்த்தமுள்ளதாக அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் என்னென்ன பொருள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன என்ற விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

சில முக்கியமான மசோதாக்களை அரசு இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டிருப்பது என்னவோ உண்மை தான்.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மசோதாக்கள் குறித்து பேசப்படலாம்.

அதுமட்டுமல்ல, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் செப்டம்பர் 9, 10 தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு முடிந்த உடனே நாடாளுமன்றம் கூடுகிறது. அந்தச் சூழலில், உலக மாநாட்டை நடத்தியது, சந்திரயான் 3-ன் வெற்றி என அரசு தனது சாதனைகளை பேசுவதற்கு இந்த கூட்டத்தொடர் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் கருதப்படுகிறது.

சுதந்திரத்தின் 50 ஆண்டுகள் முடியும்போது 1997இல் இதே போன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டதால் தற்போது 75 ஆண்டுகள் முடியும் போது அதேபோன்ற சிறப்புக் கூட்டத்தொடராக இது அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அரசின் பிம்பத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக இந்தக் கூட்டத்தொடரை பயன்படுத்திக் கொள்ள பாஜக அரசு முனையும்.

சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதை பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு எதிர்வினையாகத்தான் இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்துவதிலிருந்து தப்பிக்கவே அரசு இந்த சிறப்புக் கூட்டத்தொடரை நடத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களுடன் நடத்திட பாஜக திட்டமிடுவதாகவும் தொழிலதிபர் கௌதம் அதானி விவகாரங்களிலிருந்து திசை திருப்பவே சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சிக்கிறது.

அதோடு சிறப்புக் கூட்டத்தொடர் நடக்கும் நேரமும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. சிவ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தனது ட்விட்டரில், “விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கூட்டம் நடத்துவது இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

இந்த தேதிகளை அரசு தேர்ந்தெடுப்பது குறித்து அதிர்ச்சியடைகிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். அதே போன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சூலே, சிறப்புக் கூட்டத்தொடரின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதை அனைவரும் விரும்புகிறோம். விநாயகர் சதுர்த்தியன்று கூட்டத்தொடர் நடைபெறுவதால், அதை மாற்றியமைக்க கோரிக்கை விடுக்கிறேன் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்புக் கூட்டத்தொடர் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் நேரத்தில் கூட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களை மீறி நாடாளுமன்றச் சிறப்பு கூட்டம் நடைபெறப்போகிறது.

இந்த கூட்டத்திலாவது ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும், அமளிதுமளி இல்லாமல் நடந்து முடியவேண்டும். பல விஷயங்களை விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

இது நடக்குமா என்பதே கேள்வி!

படிக்க வேண்டும்

spot_img