திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியத் துறை மாணவி ஸ்வேதா காயத்ரி, பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் ரேஞ்சர் பிரிவு தன்னார்வலர். மேலும் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் இளைஞர் பிரிவு சேர்மனாகவும் சேவை செய்து வருகிறார்.
ரேஞ்சர் ஸ்வேதா காயத்ரி பரணி பார்க் சாரணர் மாவட்டத் துடன் இணைந்து கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ராக்கி கயிறுகளை தானே தன் கைப்பட தயாரித்து அனுப்பி வருகிறார்.
மேலும் ஆண்டு தோறும் தேசிய அளவில் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகள், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் உயரிய பணியில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைப்பில் உதவி வருகிறார்.
இதையொட்டி புதுடெல்லி இந்திய ராணுவ தலைமையகத்தில் ‘ராக்கிஸ் பார் சோல்ஜர்ஸ்’ இயக் கத்தின் தலைவர் தருண் விஜய் தலைமையில் ரக்ஷாபந்தன் தினத்தன்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு சம்பிரதாய முறைப்படி ராக்கி கயிறு அணிவித்து இந்திய முப்படை வீரர்களுக்கு நம் நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கும் வண்ணமிகு நிகழ்வில், அகில இந்திய பெண்கள் அணியின் சார்பாக இந்த ஆண்டிற்கான தலைவராக ஸ்வேதா காயத்ரி கலந்து கொண்டு ராணுவ தலைமைத் தளபதிக்கு, திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கி திருக் குறள் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறு அணிவித்தார்.
தேசபக்தியிலும் ஆக்கபூர்வமான நற்செயல்கள் செய்வதிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் பாரதிதாசன் பல்கலைக்கழக சாரணர் மாணவி ஸ்வேதாவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப்பற்றுடன் பெருமைக் குரிய தொடர் நற்செயல்கள் செய்வதன் மூலம் தேசிய அளவில் பாரதிதாசன் பல்கலைக்கும், பாரத சாரணர் இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஸ்வேதா காயத்ரியை ‘ராக்கிஸ் பார் சோல்ஜர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் தருண் விஜய், கல்வியாளர்கள் பலரும் பாராட்டி வாழ்த்தினர்.
சாரணர் மாணவி ஸ்வேதா காயத்ரியின் உயரிய சேவையைப் பாராட்டி இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் பரிசு வழங்கி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது சகோதரர் தயாகார்த்திக்குடன் இணைந்து தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் இசைப் பாடல்களை இளைய தலைமுறையினரிடம் பரபலப்படுத்தும் பணியில் தமிழ கமெங்கும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஸ்வேதா காயத்ரி நடத்தி வருகிறார்.