fbpx
Homeதலையங்கம்ஒடிசா ரயில் விபத்தும் ரயில்வே மெத்தனமும்!

ஒடிசா ரயில் விபத்தும் ரயில்வே மெத்தனமும்!

ரயில் விபத்துக்கள், தடம் புரண்டது, ரயில்கள் மோதுவது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. நவீன தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் திறன் இருந்தாலும் கூட, ரயில் விபத்துக்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இருந்தாலும் சில நாடுகள் ரயில் விபத்தை தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை செயல்படுத்துவதில் வெற்றியும் பெற்றுள்ளன.

திறமையான மற்றும் பாதுகாப்பான ரயில்வே கட்டமைப்புக்கு ஜப்பான் ரயில்வேயை கூறமுடியும். ரயில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ஜெர்மனி, தென் கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ரயில் விபத்துகளை பெருமளவில் தடுக்கின்றன.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள், வலுவான பராமரிப்பு, திறன்மிக்க தகவல் தொடர்பு அமைப்புகள், அட்வான்ஸ் சிக்னலிங், விபத்து மோதல் தவிர்ப்பு அமைப்புகள், தானியங்கி தட ஆய்வு, மேம்பட்ட தகவல் தொடர்பு போன்றவற்றை கூறமுடியும்.

பல்வேறு நாடுகளிலும் அட்வான்ஸ் சிக்னலிங் சிஸ்டம் எனப்படும் பிடிசி தொழில்நுட்பம், ரயில் மோதல் தவிர்ப்பு கருவி (டிசிஏஎஸ்), தானியங்கி தடம் ஆய்வு (ஏடிஐ) என, விபத்து அபாயங்களைக் கண்டறிய பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட முறைகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா போன்ற நாடுகளில் ரயில்வே விபத்து தடுப்பு நடவடிக்கை என்பது கேள்விக் குறியாக மாறி உள்ளது. அதற்கு ஓர் உதாரணம் தான் ஒடிசா ரயில் விபத்து.

இந்த விபத்தில் 275 பேர் பலியாகியும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றும் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த விபத்துக்கு என்ன காரணம்? எலக்ட்ரானிக் இன்டர்லாக் எனும் சிக்னல் மாற்றத்தினால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய ரயில்வே, விபத்துகளை தவிர்க்க இன்ஜின்களில் கவச் எனப்படும் கருவியை (ரயில் பாதுகாப்பு சாதனம்) பொருத்தும் தொழில்நுட்பத்தை கையாண்டது.

ஆனால் இதில் ரயில்வே மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளது என்பதை ஒடிசா ரயில் விபத்து அம்பலப்படுத்தி உள்ளது. விபத்து நடந்த ரயில் என்ஜின்களில் கவச் சாதனம் பொருத்தப்படவில்லை என்பது வேதனை தரும் செய்தியாகும்.

இந்தியாவில் 13,200 ரயில் இன்ஜின்களில் வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே கவச் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், 2022 மார்ச்சுக்கு பின் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ரயில்வே தான் சொல்ல வேண்டும்.

ஆக, ஒன்றிய அரசு பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அலட்சியமாக இருந்து விட்டது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. முதியோருக்கான கட்டணச் சலுகையைக் கூட ரத்து செய்து லாபம் பார்க்கும் ரயில்வே, பாதுகாப்பு விஷயத்திலும் தனது சிக்கன நடவடிக்கையை கையாண்டு விட்டதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி விளம்பரம் செய்வதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியது தான், ஒடிசா ரயில் விபத்தில் பெரும் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றால் அதுவும் மிகையாகாது.

பல கோடி ரூபாய்களை ஈட்டி கொடிகட்டிப் பறப்பதாக இந்திய ரயில்வே அமைச்சர் மார்தட்டி வந்தாரே, அதுவா முக்கியம்? விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டியது தான் மிக மிக முக்கியம்.

இனியாவது இந்திய ரயில்வே விழித்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகளில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதனை உடனடியாக செயல்படுத்தி ஒடிசா விபத்து போல இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம்!

படிக்க வேண்டும்

spot_img