fbpx
Homeபிற செய்திகள்கப்பலேறுகிறதா இந்தியாவின் மானம்?

கப்பலேறுகிறதா இந்தியாவின் மானம்?

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், உத்தரப்பிரதேச பா.ஜ.க-வின் எம்.பி-யாகவும் இருந்து வருகிறார். இவர் மீது, மல்யுத்த வீராங்கனைகள் எட்டு பேருக்குப் பாலியல் தொல்லை (ஒரு மைனர் பெண் உட்பட) கொடுத்ததாக புகார் முன்வைக்கப்பட்டது.

சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஜனவரி மாதமே இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நீடித்த நிலையில், இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க ‘மேரிகோம்‘ தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும், அது வெளியிடப்படவில்லை.

புகார் மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதியிலிருந்து தலைநகர் டெல்லியில் தங்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால், மத்திய அரசு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தான், கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. இதை முற்றுகையிடும் நோக்கில் வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களின் பேரணியைத் தடுத்த காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். அப்போது வீராங்கனைகள் கீழே தள்ளப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்ட விதம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இறுதிக்கட்டமாக, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, தாங்கள் சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களைக் கங்கையில் வீசப்போவதாக அறிவித்த வீராங்கனைகள், கடந்த மாதம் 30-ம் தேதி ஹரித்வாரில் கங்கையை நோக்கிச் சென்றனர்.

நாட்டுக்காகப் போராடி வாங்கிய பதக்கங்களை ஆற்றில் வீசயிருப்பதை எண்ணி, அங்கு அவர்கள் சிந்திய கண்ணீர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், பாலியல் புகார்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடும் இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் கண்டனத்துக்குரியது. புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

கூட்டமைப்பில் கலைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுக்கள் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்யப்படும் எனக் எச்சரித்துள்ளது.

இத்தகைய பாலியல் புகாரை மத்திய பா.ஜ.க அரசு கையாளும் விதம், உலகளவில் இந்தியாவின் கௌரவத்தைக் குறைத்துவிட்டதுஎன எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது திருட்டு, கலவரம், கொலை, மிரட்டல், கொலை முயற்சி, ஆட் கடத்தல் போன்ற பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின்கீழ் இதுவரை ‘38’ கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இத்தகைய குற்றப் பிண்ணனி கொண்ட ஒருவரை பா.ஜ.க அரசு காப்பாற்ற நினைப்பது ஏன்?’ என்று எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விக் குறி விஸ்ரூபமாக இந்திய வரைபடத்தை அடைத்தபடி நிற்கிறது.

இந்த கேள்விக்குறி இன்னும் விஸ்வரூபம் எடுத்து உலக வரைபடத்தை மறைக்கும் முன் பிரதமர் மோடி தலைமையிலான மைய அரசு நடவடிக்கை எடுக்குமா? நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், அவசரமும் கூட!

படிக்க வேண்டும்

spot_img