fbpx
Homeதலையங்கம்தேவைதானா தேர்தல் பத்திர நன்கொடை?

தேவைதானா தேர்தல் பத்திர நன்கொடை?

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி நேற்று முதல் விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தை 1998ம் ஆண்டு கொண்டு வந்ததே மத்திய பாஜக அரசு தான்.

தேர்தல் பத்திர திட்டம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வழங்கினார்கள் என்று குறிப்பிடாமலேயே நிதியை வாரிவாரி வழங்கலாம். வருகிற 13ம் தேதி வரை தேர்தல் பத்திரங்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.10000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகிய மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்களை பணம் கொடுத்து வாங்குபவர்களின் பெயர் வெளியே தெரியாது. அவற்றை வாங்குவோர், அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

அரசியல் கட்சிகள் பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் தொழிலதிபர்களிடம் இருந்தும் கோடிக்கணக்கில் தேர்தல் செலவுக்காக ரகசியமாக நன்கொடை பெறுவதாக குற்றச்சாட்டு எப்போதும் இருந்து வருகிறது. அப்படி வாங்கும்போது அந்த நன்கொடையாளர்களுக்கு ஆதரவாகத்தானே கை நீட்டி வாங்கிய கட்சிகள் நடந்து கொள்ளும்?

தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்படுவதும் இந்தப் போக்கை ஊக்கப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு. ஆக, இந்த தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது தேவைதானா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் ஆளுங்கட்சிக்கே அதிக நன்கொடை வந்து குவியும் என்பதில் சந்தேகமில்லை. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி புறவாசல் வழியாக நன்கொடைகளை கோடிகோடியாகக் குவிப்பது பெரிய கட்சிகள் தான். வலுவான பின்னணி கொண்டு அந்த கட்சிகள், தேர்தல் பத்திரம் மூலம் பணம் திரட்டுவதை தவிர்க்கலாமே.

இதனை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிகச்சரியாக விமர்சித்து இருக்கிறார். தேர்தல் பத்திரம் என்பது சட்டப்பூர்வ லஞ்சம் என்று அவர், ஆணி அடித்தாற்போல பதிவு செய்திருக்கிறார்.

தேர்தல் பத்திரம் என்ற பணவேட்டைக்கு ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக்கட்சிகளும் கூடிப்பேசிக் கூட முடிவெடுக்கலாம்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

படிக்க வேண்டும்

spot_img