fbpx
Homeதலையங்கம்மோகன் பாகவத்தின் இரட்டை வேடம்!

மோகன் பாகவத்தின் இரட்டை வேடம்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர் களுக்குத் திடீரென்று ‘‘சமூகநீதி, – ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீது திடீர்ப் பற்று, பாசம் பொங்கி வழியத்தொடங்கி விட்டது.

‘‘2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, முதலியவர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள சமூகநீதி அவசியம் கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதாக தந்தை பெரியாரின் கொள்கையை நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஒப்புக்கொள்வது போல அவர் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தற்போதைய இடஒதுக்கீட்டை ஒழிப்பதையே தொடக்கத்திலிருந்து கூறிய இயக்கமாகும். இந்த நிலையில் அதன் தலைவர் மோகன் பாகவத் இப்போது யூ&டேர்ன் அடித்திருப்பது ஏன்-? இதற்குமுன் பல மேடைகளில் இடஒதுக்கீடு மறுபார்வைக்கு – பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அதனை எதிர்த்து, அறவே நீக்க முழங்கிய இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இப்போது ஏன் திடீர் பல்டி அடிக்கிறார்?

இப்படி அவர் தனது குரலை மாற்றிப் பேசுவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல; முன்பு பீகாரில் காங்கிரசும் – நிதிஷ்குமார் கட்சியும் பா.ஜ.க.வுக்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து, தேர்தலை எதிர்கொண்டபோது, அவர்களைச் சில மேடைகளில் எதிர்த்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பிறகு தோல்வி முகம் பளிச்சென்று தெரிந்தவுடன், கடைசி நேரத்தில், இதுபோன்று இட ஒதுக்கீட்டினை எதிர்க்காமல், இப்போது பேசுவதுபோல் இவ்வளவு வெளிப்படையாக – பேசாது, பேசினார்.

மக்களிடம் நடக்காத பல வாக்குறுதிகளைக் கொடுத்து, இனியும் வாக்குகளை வாங்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் புரிந்துவிட்டது.
பிரதமர் மோடி சரியான வாக்கு வங்கியாக இனி பயன்பட மாட்டார் என்பதை நாளும் உணருவதால் (கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இதனை உறுதிப்படுத்தி விட்டது), புதிய புதிய உத்திகளும், வித்தைகளும் ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தேவைப்படுகின்றன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியவர்களின் சமூகநீதிக் கொள்கை புறந்தள்ளப்பட முடியாத அளவுக்குத் தேர்தலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. அதனால் தான் மோகன் பாகவத்தின் குரல் மாறி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

மண்டல் கமிஷனின் சமூகநீதிக் காற்று இந்தியா முழுவதும் – பலமாக வீசத் தொடங்கிவிட்டது. அதனால் தான், தற்போது… கடைசி நேரத்தில் சமூகநீதி முகமூடியை அணிந்து புதிய மாயமானை விட்டு தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று ஆட்சியின் கொள்கை வகுக்கும் கர்த்தாவான மோகன் பாகவத் முயற்சிக்கிறார் என்பதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் நோக்கமல்ல; 2024 தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

அதற்காகத்தான் மோகன் பாகவத் வேஷம் போடுகிறார் என்பது வெள்ளி டைமலை. அப்படியே அவர் உண்மையாக…மனசாரக் கூறி இருப்பாரேயானால் தற்போது கடைப்பிடித்துவரும் இட ஒதுக்கீடு – சமூகநீதி போல, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் – மாவட்ட நீதிபதிகள் வரை நியமனத்திலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவார்களா?

அதற்கான அரசமைப்புச்சட்ட விதிகளில் திருத்தம் செய்து – அவசரச் சட்டம் கொண்டு வரத்தயாரா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சவால்
விடுத்துள்ளாரே? அதனை மோகன் பாகவத்தோ பிரதமர் மோடியோ அமித்ஷாவோ ஏற்று அதனை பிரசாரமாக்கி வரும் தேர்தலை சந்திக்க முன்வருவார்களா?
இரட்டை வேடம் வேண்டாம்!

படிக்க வேண்டும்

spot_img