மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. இக்கொலை & கொள்ளையில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் 49 பேர் கொண்ட சிபிசிஐடி குழு விசாரணை நடத்துகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வழக்கில் கடந்த வாரம், உதகை நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மர்மமான முறையில் இறந்த, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ஊடகங்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிரடி கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்து வருகிறது. இதனிடையே தனபால் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். ஜே.நட்டா, அமித்ஷா ஆகியோருடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசப்போவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் அதற்கு என்ன அவசரம்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஆம், எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு பற்றி மட்டுமே பேசப்போவதில்லை. கொடநாடு கொலை &கொள்ளை வழக்கு விசாரணை தன்னை நோக்கி நகருவதால் அதில் இருந்து தப்பிக்கும் வழியைத் தேடியும் அவர் டெல்லி சென்றிருப்பதாக தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமித்ஷாவுடன் சந்திப்பின்போது கொடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். அமித்ஷாவே நினைத்தால் கூட, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என்பது உடனடியாக நடக்க முடியாத ஒன்றாகத் தான் உள்ளது.
ஏனென்றால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற மாநில அரசின் அனுமதி வேண்டும் அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த இரண்டுமே உடனடியாக நடக்கக்கூடியதல்ல.
இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகும் தனபால், கொடநாடு கொலை &கொள்ளை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தனது வாக்குமூலமாகத் தெரிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என அவர் மீண்டும் கோரப்போவது நிச்சயம்.
அடுத்தகட்டமாக, எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்புவார்கள். இது நடக்கப்போவதும் நிச்சயம்.
அதற்கு அடுத்து என்ன நடக்கும்?