fbpx
Homeதலையங்கம்பெண் அதிகாரிகளின் குழாயடிச் சண்டை!

பெண் அதிகாரிகளின் குழாயடிச் சண்டை!

இரு பெண்களால் கர்நாடக மாநிலமே தலைகுனிந்து கிடக்கிறது. அவர்கள் சாதாரண பெண்களாக இருந்தால் பரவாயில்லை. ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மௌத்கில். இன்னொருவர் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி. இருவரும் அம்மாநிலத்தில் சாதனை அதிகாரிகளாக வலம் வந்திருக்கின்றனர்.

சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது சொகுசாக அனைத்து வசதிகளையும் அனுபவித்து வந்ததை அம்பலப்படுத்தி பாராட்டு பெற்றவர் தான் ரூபா மௌத்கில்.
அதேபோல 2015ல், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஜில்லா பஞ்சாயத்து சிஇஓவாக இருந்தபோது, ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கழிப்பறைகளை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் விருது பெற்றவர் தான் ரோகிணி சிந்துரி.

இந்த இரு அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல் தற்போது கர்நாடக அதிகார வர்க்கத்தையும் அரசியல் வர்க்கத்தையும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.

பணி தொடர்பான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் சுமத்திக் கொண்டதோடு நிற்காமல் அந்தரங்க படங்களையும் பகிர்ந்து தனிப்பட்ட தகாத நடத்தை புகாரும் சுமத்தப்பட்டு இருப்பது வெட்கக் கேடானது. இப்படி நடந்து கொள்ளத்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நடத்தை விதிகள் சொல்கிறதோ-?

அந்த அளவிற்கு இரு பெண் அதிகாரிகளின் சகிக்க முடியாத, கேவலமான குழாயடிச் சண்டையை வளரவிட்டு வேடிக்கை பார்த்தது அதை விடப் பெரிய தவறு. தலைமைச் செயலாளர் தடுத்திருக்கலாம்; ஏன், முதல்வர் பசவராஜ் பொம்மை முட்டுக்கட்டை போட்டிருக்கலாம்.

ஒன்றிய உள்துறை வரை நாற்றம் வீசியபிறகு தான் ஒரு சிறிய நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நுணலுந் தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப வசைபாடி இருவரும் முடங்கிக் கிடக்கிறார்கள். சாதனைப் பெண்ணரசிகளுக்கு இது தேவையா?

இருவரில் யார் குற்றவாளி என்பதல்ல பிரச்னை. அவர்கள் நடந்து கொண்ட விதம் தான் பிரச்னை. கர்நாடகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அந்த தண்டனை மற்ற அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறது, கர்நாடக பாஜக அரசு?.

படிக்க வேண்டும்

spot_img