கர்நாடகா மாநிலத்தில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனும் ஆவார்.
கடந்த ஏப்.26-ம் தேதி 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. பல இளம்பெண்களை கட்டாயப்படுத்தி தனது பாலியல் இச்சைக்கு இணங்கவைத்த பிரஜ்வல், அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆங்கில செய்தி தொலைக்காட்சியான சிஎன்என் செய்தியில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தல் தொடர்பான செய்திகளை சிஎன்என் செய்தி சேனல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் முக்கிய சம்பவங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்திகளில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை விவகாரமும் முக்கிய செய்தியாக இடம்பிடித்து விட்டது.
மேலும் பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் விவகாரம், சர்வதேச அளவில் பேசும்பொருளாகி இருப்பது இந்தியாவிற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
தனி மனித ஒழுக்கம் அதுவும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அது மிகமிக அவசியம் என்பதற்கும் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவே விஸ்வரூப உதாரணம்!