fbpx
Homeதலையங்கம்மகளிருக்கு ரூ.1000 திட்டம்- சரித்திரம் காணா சாதனை!

மகளிருக்கு ரூ.1000 திட்டம்- சரித்திரம் காணா சாதனை!

குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த மாதத்திற்கான பணம் செலுத்தப்பட்டு விட்டது.
அறிஞர் அண்ணாவின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (செப்டம்பர் 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்திருப்பது பொருத்தமானதாகும்.

திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தனது இரண்டாண்டு ஆட்சி நிறைவில், அதன் மகுடத்தில் மற்றுமோர் சாதனை முத்தைப் பதித்துக் கொண்டுள்ளார்.

1989 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதை சட்டமாக்கினார்.
தி.மு.க. கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வதோடு, சொல்லாத பல சாதனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக அவர் பூரிப்படைகிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? கடுமையான நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செம்மையாக… நேர்த்தியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் அன்றே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று கொடுத்து, இன்ப அதிர்ச்சியைத் தந்தார்; அன்றாட வேலைக்குச் செல்லும் ஏழை மகளிருக்கு இது ஒரு பொருள் சேமிப்புத் திட்டமாக மாறியது. ஏற்கனவே குடும்பத்தில் கல்லூரியில் படிக்கும் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் சென்று கதவைத் தட்டுகிறது.

அந்தச் சாதனைகள் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ரூ.1000 வழங்குவது சாதாரண நிகழ்வல்ல; சரித்திரம் காணா அரும்பெரும் சாதனை.

மற்ற மாநிலங்கள் வாய் பிளந்து பார்ப்பதோடு, இதையே இனி தேர்தல் வாக்குறுதியாக சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக்கப்பட்டு, முனைப்புடன் யோசிக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழ்நாடு தான், முதன்மையான முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? திராவிட மாடல் ஆட்சியின் நாயகனாம் ஸ்டாலினின் ஆளுமையை என்னவென்று பாராட்டுவது?

‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ – இது வறுமை ஒழிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகத்தையே மாற்றி அமைக்கும் புரட்சித் திட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவோம் – அவரது ஆட்சியும், சாதனைகளும் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img