fbpx
Homeதலையங்கம்பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு நியாயமா?

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு நியாயமா?

மோடி 3.0 அரசின் முதல் முழு மத்திய பட்ஜெட் என்பதால் இதில் சலுகைகள் பல அறிவிக்கப்படும் என்று மக்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். அதே நேரத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களது முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இருந்தன. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் தனது ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் பீகார் மாநிலத்துக்கு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தருவதாக அறிவித்தார்.
இது தவிர இந்த இரு மாநிலங்களுக்கும் பல்வேறு சலுகைகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசு பீகாரில் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் தயவில்தான் பதவியில் நீடிக்கிறது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த தாராளமாக நிதி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மற்ற மாநிலங்களுக்கும் திட்டங்கள், சலுகைகள், நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் நிர்மலா சீதாராமனின் உரையில் இடம் பெறவில்லை.
தமிழ்நாடு என்ற வார்த்தையை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள், திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்த அறிவிப்பு கூட இடம்பெறவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், புதிய ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டங்கள் பற்றியும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மத்திய பட்ஜெட் உரை என்றாலே, நிர்மலா சீதாராமனின் தமிழ் மேற்கோள்கள், தமிழர்களிடையே தனிக்கவனம் பெறும்.
ஆனால் இம்முறை புறநானூற்று பாடல் வரிகள், திருக்குறள், ஆத்திச்சூடி பாடலை யெல்லாம் நிர்மலா சீதாராமன் மறந்தே போய் விட்டார். அவர் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மட்டுமா மறந்தார்? தமிழ் மொழியையும் மறந்தே போய் விட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து விட்டதாக திமுக மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் வகையில், பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த காரணத்தால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு விட்டதே…
இது நியாயமா?

படிக்க வேண்டும்

spot_img