fbpx
Homeதலையங்கம்தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்!

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘மிக்ஜாம்’ புயல் ஏற்பட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை கொட்டியது. அதன் காரணமாக கடுமையான பொருட்சேதம் மட்டுமின்றி பொது மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.
அதேபோன்று, இது நடந்து முடிந்த அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிடும் வகையில் ஒன்றிய அரசு உடனே தேசிய பேரிடர் நிவாரண நிதி 37,907 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஒன்றிய அரசு தாமதம் செய்த நிலையில், தமிழ்நாடு அரசே தனது நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகையை அறிவித்தது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தினர்.
அதேபோல் தமிழ்நாடு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கோரியிருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காமலிருந்தது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு யானை பசிக்கு சோளப்பொரி போல் வெறும் ரூ. 276 கோடி நிதியை தற்போது ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில், ஒன்றிய அரசு ஒரு சதவீதத்திற்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக வழங்கி இருக்கிறது. ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்புக்காக மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 3498.82 கோடி ரூபாயை அளித்திருக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது என்பது வெள்ளிடைமலை.

நிவாரண நிதி கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் ஒன்றிய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது என்பதற்கு இதுவே ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதிக வரி அளிக்கும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்காக கூட போதிய நிதி தராததற்கு பிரதமர் மோடி எத்தனை சமாதானங்களை எடுத்துரைத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாவட்டார்கள்.
இந்த வஞ்சனை, கரும்புள்ளியாக தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சங்களில் பதிந்து விட்டது. அதனைத் துடைத்தெறிய வேண்டுமானால் மக்கள் ஏற்கத்தக்க பெருந்தொகையை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒதுக்கித் தருவதைத் தவிர வேறு வழியியே இல்லை!

படிக்க வேண்டும்

spot_img