கோவையில் மண் பானைகள் தயாரிப்புக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மண் பானை தொழில் நலிவடைந்து வருவதாக மண்பானை தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மண் பானை விற்பனையில் ஈடுபடுபவர்கள் கூறியதாவது:
முன்பை விட மண் பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது. கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து உள்ளதால், மண் பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மண்ணால் செய்த பானைகளின் முக்கியத்துவம், பயன்கள் அதிகம் இருப்பதால் மண் பானைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஆனால் அதனை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.