உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அது புதியவகை வைரஸாகவும் இருக்கலாம். இந்த வைரஸின் பெயர் H3N2. நாடு முழுவதும் அண்மைக்காலமாக வேகமாக பரவி வரும் இந்த புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.
இந்த வைரஸ் ஆபத்தானதா? அதுகுறித்த அச்சம் தேவையா? வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வைரஸ் தொற்று வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பன குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா போன்ற அறிகுறிகளுடன் இந்தியாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. பலருக்கும் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் இந்த இன்ப்ளூயன்சா ஏ வகையைச் சேர்ந்த வைரஸை, H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அடையாளப்படுத்தியுள்ளன.
இந்த வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன? &காய்ச்சல், இருமல், குமட்டல்/ வாந்தி, தொண்டை வலி, உடல் வலி/ சோர்வு, வயிற்றுப்போக்கு. மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.
ஐ.சி.எம்.ஆர். ஆய்வுகளின் படி, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள், முதியோர், இணை நோய் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் H3N2 வைரஸ் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பு உண்டு. பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும்.
தேவைப்பட்டால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.சுய மருத்துவம் கூடாது. அது ஆபத்தானது. பொன்னான நேரத்தை அதில் வீணாக்கி விடக் கூடாது.குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.
இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். முகக்கவசம் அணிவது அவசியம். கூட்ட நெரிசலாக இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும். கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது. பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது. மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது.
மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது.கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது எந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தோமோ கிட்டத்தட்ட அந்த கட்டுப்பாடுகளை இந்த வைரஸ் காய்ச்சலுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக நம்மை விட்டு விலகிவிடவில்லை.
கொஞ்சம் கவனமாக இருந்து H3N2 வைரசையும் விரட்டியடிப்போம்!