fbpx
Homeதலையங்கம்ரூ.1000 கோடி நிலம் மீட்பு- தொடரட்டும் நடவடிக்கை!

ரூ.1000 கோடி நிலம் மீட்பு- தொடரட்டும் நடவடிக்கை!

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் தீவிர முயற்சியால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்லாயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன; மீட்கப்பட்டும் வருகிறது.

தனியார் ஆக்கிரமிப்புகளில் இருக்கும் அரசு நிலங்களை மீட்பதில் வருவாய்த்துறையும் களமிறங்கி தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில், கதீட்ரல் சாலையில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த, அரசுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக தற்போது மீட்கப்பட்டுள்ளது.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகே இது சாத்தியமானது. நீதிமன்றத் தீர்ப்பும் அரசுக்குச் சாதகமாக அமைந்தது. இந்த நடவடிக்கை திமுக அரசின் அதிரடிச் சாதனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி தொடர்ந்து நடக்கும் என்றும் அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு நிலங்களை மீட்பதில் சமரசத்திற்கு இடமே இல்லை என நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்புகளில் இடித்துரைத்துள்ளன.
ஆம்; ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலங்களை மீட்பதில் தமிழ்நாடு அரசு இன்னும் தீவிரம் காட்டி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

தொய்வில்லா தொடர் நடவடிக்கைகளே ஆக்கிரமிப்பாளர்களுக்கு அச்சம் தரும்.
இனி ஆக்கிரமிக்க நினைப்பவர்களுக்கும் பாடமாக இருக்கும்!

படிக்க வேண்டும்

spot_img