fbpx
Homeதலையங்கம்ஆளுநருக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக!

ஆளுநருக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக!

தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ரவி கடுமையாக சாடிப் பேசி வருகிறார். அண்மையில் கூட முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார்.

தமிழ்நாடு அரசால் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளது பற்றி திமுகவினர் விமர்சிக்கும் நிலையில், திமுகவின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசி வருவதால் இரு தரப்புக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை கடுமையாக விளாசி வருகின்றனர்.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது திமுக தரப்பின் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.
தற்போது திடீரென ஆளுநருக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாயைத் திறந்து இருக்கிறார்.

அவர் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சியின் பிரதிநிதி போல் பேசி வருகிறார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது. ஆளுநர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது.

ஆளுநர் அவராகவே பேசுகிறாரா? அல்லது வேறு எங்கும் இருந்து அவருக்கு அறிக்கை வருகிறதா? எனத் தெரியவில்லை. ஆளுநர் -& ஆளுங்கட்சி இடையேயான மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆளுநரின் கருத்துகளை விமர்சித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் அதிமுகவும் தற்போது கைகோர்த்து கொண்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒரணியில் திரள வேண்டும், அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் செல்லூர் ராஜூவின் கருத்து அதற்கு புதியதோர் வலு சேர்த்து உள்ளது.

இது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். தமிழர் நலனுக்கு எதிரானது என்றால் தமிழ்நாடே ஓரணியில் திரளும் என்பதை இனியாவது ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img