Homeதலையங்கம்மின்கட்டண சுமையை குறைக்குமா தமிழ்நாடு அரசு?

மின்கட்டண சுமையை குறைக்குமா தமிழ்நாடு அரசு?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் என முன்தேதியிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இருப்பதில் இருந்து 4.38 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

401 முதல் 500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 15 காசுகளிலிருந்து 6 ரூபாய் 45 காசுகளாகவும், 501 முதல் 600 யூனிட் வரையிலான் பயன்பாட்டிற்கு யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் 15 காசுகளிலிருந்து 8 ரூபாய் 55 காசுகளாகவும் 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளிலிருந்து 9 ரூபாய் 65 காசுகளாகவும், 801 முதல் 1000 யூனிட் வரையிலான பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளிலிருந்து 10 ரூபாய் 70 காசுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு இனி 11 ரூபாய் 80 காசுகள் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாமக, அதிமுக, அமமுக கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளும் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசே முக்கிய காரணம் என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. மின்வாரியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, பல்வேறு நிபந்தனைகளை ஏற்கவேண்டுமென வெளிப்படையாக மாநில அரசுகளை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது என்றும் இப்போதும், ஆர்.டி.எஸ்.எஸ் திட்டத்தில் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு கட்டண உயர்வு கட்டாயம் என மத்தியஅரசு நிபந்தனை விதிப்பதாகவும் தமிழ்நாடு மின் வாரியம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கான மின்கட்டணச் சுமையை தமிழக மக்களின் மீது திணிப்பது சரியல்ல. சுமார் 1 கோடி மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றாலும், வீட்டு இணைப்புகளுக்கு சில பைசாக்கள் என்ற அளவில்தான் உயர்வு இருக்கும் என மின்சார வாரியம் சில விளக்கங்களை முன்வைத்துள்ளது.

ஆனாலும் இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. எனவே மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற அனைத்து தரப்பினரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மின்கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அதனை மக்கள் ஏற்கும் வகையில் முடிந்த அளவு குறைத்து மறு அறிவிப்பு வெளியிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மக்கள் மீதான மின்கட்டண சுமை குறைக்கப்பட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img