Homeபிற செய்திகள்கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்து: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்து: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை – மேட்டுபாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பதாக மக்களிடத்திலிருந்து புகார் வந்துள்ளதாகவும் இது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவ சங்கர் பேட்டியின்போது தெரிவித்தார்.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக திருச்சி,பாலக்காடு , சேலம் ஆகிய வழி தடத்திற்கான சுமார் 21 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடி யசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 1000 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. அதனையொட்டி இன்று கோவையில் 21 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கபட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததால் தற்போது புதிய பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். பயன்படுத்தகூடிய 800 பழைய பேருந்துகள் மேலே கூடுகட்டப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் 500 EV பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதல் 100 பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிவு பெற்று முதல் 100 பேருந்துகள் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் அடுத்தகட்டமாக முக்கிய நகரங்களுக்கு வழங்கப்படும்.
சமீபத்தில் கோவை &- மேட்டுபாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பதாக மக்க ளிடத்திலிருந்து புகார் வந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெறும். இந்த வாரமே விசாரணை துவங்கப்படும். ஜூலை 22 ஆம் தேதி மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதற்கு பிறகு கருத்துரு உருவாக்கப்பட்டு மினி பேருந்துகள் எந்த வழித் தடத்தில் இயங்கும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மின்சாரம் கட்டணம் போல் பேருந்து கட்டணமும் உயரும் என்று தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு – உங்களுக்கு வந்த தகவல் எங்களுக்கு வரவில்லை எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மறைந்த எல்பிஎப் நிர்வாகி இரத்தினவேல் குடும்பத்தினருக்கு ரூ.6,39,000 நிதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், போக்குவரத்து மேலாண் இயக்குனர் ஜோசப், பொதுமேலாளர் ஸ்ரீதர், துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்( (முன்னாள் எம்எல்ஏ), தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாநகராட்சி மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, எல்பிஎப் பொதுச்செயலாளர் பெரியசாமி, மண்டல தலைவர் துரைசாமி, மண்டல பொருளாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img