இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதனால், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவித்த போது இந்தியா பெரும் உதவி அளித்தது. வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு இந்தியா, இலங்கைக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டியது. இதனால், இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று நிமிர்ந்துள்ளது.
இத்தகைய சூழலில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவை, இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பில் ஈழத் தமிழர்களின் நலன் குறித்து மட்டுமின்றி தீராத தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னை பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தனது தமிழ் ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டும் என்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்“ என்று கூறி உள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், அடித்து துன்புறுத்தி படகுகளை பறிமுதல் செய்வதோடு வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அடிக்கடி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீன்வர்களைக் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பது மாதம் ஓரிரு முறையாவது நடந்தேறுகிறது.
கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அது உடனடியாக நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இந்திய பிரதமரும் இலங்கை அதிபரும் அது குறித்து விவாதித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் நலன் குறித்து பேசி இருப்பதே பெரிய விஷயம்.
முதல்கட்டமாக, தமிழ் நாட்டு மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரக்கூடிய சூழல் இவர்கள் சந்திப்பால் நிகழுமானால் அதுவே நமது பிரதமரின் இமாலய சாதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாட்டு மீனவர்களுக்காக பிரதமர் மோடியே குரல் கொடுத்திருப்பது வெறும் அரசியலாக இருக்க முடியாது.
நன்றி…நன்றி…நன்றி!



