Homeதலையங்கம்இந்திய வரலாற்றில் முஸ்லிம் இடம் பெறாத முதல் அமைச்சரவை!

இந்திய வரலாற்றில் முஸ்லிம் இடம் பெறாத முதல் அமைச்சரவை!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி, ஜம்மு – காஷ்மீர் சுயேச்சை எம்பி அப்துல் ரஷித் ஷேக், லடாக்கின் முகமது ஹனிஃபா ஆகியோர் ஆவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 293 மக்களவை உறுப்பினர்களில் முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை.
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 1999ஆம் ஆண்டு இரு முஸ்லிம்கள் மத்திய அமைச்சர்களாகவும் 1998ல் ஒரு முஸ்லிம் மத்திய இணையமைச்சராகவும் இருந்தனர்.

2004, 2009ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முறையே 4 மற்றும் 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 2014ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக இருந்தார்.

2019ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி இருந்தார். 2022ல் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்த பின்னர் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

உண்மையில், இம்முறை (2024) அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிலும் முஸ்லிம் எம்.பி. இல்லை. அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தரப்படவில்லை என்பது வேறு விஷயம். அதனால் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை.

அதேவேளையில் மக்களவைத் தேர்தலில் தோற்றாலும் சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி.க்காவது அமைச்சரவையில் இடமளித்தால் மதசார்பற்ற தேசம் என்ற மாண்புக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் அல்லவா?

இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்று பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் வரை இடம்பெறலாம். ஆகவே ஒரு முஸ்லிமை அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் மோடிக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

மக்கள்தொகையில் ஏறத்தாழ 14% உள்ள முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காதது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பாதகமான ஒரு சூழலைத் தவிர்க்கும் வகையில் விரைவில் ஒரு முஸ்லிம் அமைச்சர் மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img