fbpx
Homeதலையங்கம்இடைத்தேர்தல் தந்த இரு அதிர்ச்சிகள்!

இடைத்தேர்தல் தந்த இரு அதிர்ச்சிகள்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மிகப் பெரிய இரு அதிர்ச்சிகள் என்றால், அது நாம் தமிழர் கட்சிக்கும் தே.மு.தி.கவிற்கும் தான். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 11,629 வாக்குகளைப் பெற்றார்.

இது பதிவான வாக்குகளில் 7.65 சதவீதம். ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சி 10,804 வாக்குகளையே பெற்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட 800 வாக்குகள் குறைவு என்பதோடு, வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது.

கடந்த முறை, 7.65 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி, இந்த முறை பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது, முதலியார்கள், அருந்ததியர்கள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சமூக ரீதியிலும் மொழிரீதியிலும் வாக்காளர்களைப் பிரித்து, வாக்குகளைச் சேகரிக்க முயல்கிறாரா என்ற கேள்விகளையும் எழுப்பியது.
ஆனால், பிரசார களத்தில் நாம் தமிழர் கட்சியினர் மிக சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் பிரசாரத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பிரசாரத்தைத் தாண்டியும் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இந்தத் தேர்தலிலேயே மிக மிக மோசமாக பின்னடைவைச் சந்தித்திருக்கும் கட்சி என்றால், அது தே.மு.தி.க தான். 2008ல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டவுடன், 2011ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் சந்திரகுமார் நிறுத்தப்பட்டு, அவர் வெற்றியும்பெற்றார். இதற்கடுத்தடுத்த தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியில் பின்னடைவுதான் ஏற்பட்டது.

ஆனால், இந்த முறை இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மிகுந்த உற்சாகத்துடன் வேட்பாளரை அறிவித்தது தே.மு.தி.க. ஏற்கனவே தங்கள் வசம் இருந்த தொகுதி இது என்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை மிக மோசமாகவே இருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தும் அவரது மகன்களுமே பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பிரசாரக் களத்தில் இல்லாதபோது, தேர்தல் பணியாற்ற ஆட்களும் இன்றி, போதுமான நிதியும் இன்றி தவித்தது தே.மு.தி.க.

முடிவில் வெறும் 949 வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. இந்தத் தோல்வி, அந்தக் கட்சியைப் பொறுத்தவரை பெருத்த எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து வெறும் 60 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது.

இனிவரவிருக்கும் தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு எவ்விதமான பேர வலிமையும் இருக்காது என்பதோடு, அக்கட்சியை சேர்க்க பிரதான கட்சிகள் யோசிக்கும் நிலையையும் இந்தத் தோல்வி ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், வெற்றி தோல்விகளை மட்டுமே நிர்ணயிக்கவில்லை. சில கட்சிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றி விட்டது என்பதே உண்மை!

படிக்க வேண்டும்

spot_img