நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது அதிமுக. ஒவ்வொரு முறையும் கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி வருகிறது அதிமுக.
அதே நேரத்தில் அதிமுக உடனான கூட்டணியை பாஜக விரும்புகிறது.
தொடர்ந்து பேசி வருவதாக கூறியுள்ளார் பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முறிவு பரபரப்புக்கு இடையே பாஜக தலைமையிடம் இருந்து வந்த அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார், அண்ணாமலை. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை. அதோடு, அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவையில் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் அண்ணாமலை தலைமையில் மாநில பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நாளை (5ம் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டி வந்தாலும், மறுபுறம் அதிமுக கூட்டணிக்காக பாஜக தொடர்ந்து துரத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் தொடருமா? துரத்தும் பாஜக கையில் அதிமுக சிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.