fbpx
Homeதலையங்கம்அதிமுகவை வசப்படுத்திய இ.பி.எஸ். சாணக்கியத்தனம்!

அதிமுகவை வசப்படுத்திய இ.பி.எஸ். சாணக்கியத்தனம்!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவில் நடந்த சதுரங்க ஆட்டத்தில், குதிரை போன்று செயல்பட்டு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஓரங்கட்டியது அவரது ஆதர வாளர்களால் கொண்டாடப்படுகிறது.
மேலும் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும். இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த உற்சாகமாகி உள்ளார். அதேவேளையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஷாக்கில் உள்ளனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியினரின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் 60 எம்எல்ஏக்கள், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், 2,300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சி என்பது கடந்த 5 ஆண் டுகளாக மிக வேகமாக இருந்துள்ளது. சசிக லாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தபோது எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங் கியது. மேலும் கட்சியில் தனக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதையும், அவர்களை தக்க வைக்கும் நுணுக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக பயன்படுத்த தொடங்கினார்.

4 ஆண்டு ஆட்சியை முதல்வராக நிறைவு செய்த எடப்பாடி பழனிச்சாமி சிறந்த தலைவராக கட்சியினரிடையே தனது அந்தஸ்தை உயர்த்தி கொண்டார். அதன்பிறகு கடந்த ஆண்டு பொதுச்செயலாளர் பதவி மீது கண்வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அவருக்கு செக் வைத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தான் விரும்பியதை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது முடிவில் மிகவும் தெளிவாக இருந்தார். திடமான முடிவுகளை எடுப்பதில் அவர் தயங்கவில்லை.

மாறாக ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோதில் இருந்து பாஜகவைச் சார்ந்தே இருந்து வந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி யாருக்கும் அடிபணியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் போல் அவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டவில்லை. அவர்களிடம் எந்த ஆலோசனைகளையும் பெறவில்லை. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அப்படியில்லை. பாஜகவிடம் பல ஆலோசனைகளை கேட்டார். துணை முதல்வர் பதவியை பெற்றது முதல் பல விஷயங்களை கூறலாம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில் கூட பாஜகவை சார்ந்து தான் இருந்தார். பாஜக வேட்பா ளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை வாபஸ் வாங்குவதாக கூறியதே அதற்கு எடுத்துக்காட்டு.

இப்படியாக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு என்பது உறுதியற்ற தன்மையில் இருந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்க வழி வகுத்தது என்றால் மிகையாகாது. அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியத்தனம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. எப்படி எம்ஜிஆர் தான் அதிமுக, ஜெயலலிதா தான் அதிமுக என்றிருந்ததைப் போல இன்றைக்கு அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்றாகி விட்டது. இனி, தமிழ்நாட்டில் பலமான எதிர்க்கட்சியாக மீண்டும் அதிமுக செயல்படட்டும்!

படிக்க வேண்டும்

spot_img