அதிமுக – பாஜக கூட்டணி நிஜமாகவே முறிந்துவிட்டதா? அல்லது எதிர்க்கட்சிகள் சொல்வது போல அரசியல் நாடகமா? என்ற விவாதம் கிளம்பி வருகிறது. அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாஜக எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனால், கடுமையாக அப்செட் ஆகியிருப்பதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படியொரு முடிவு எடுத்திருப்பது கலக்கத்தையும் குழப்பத்தையும் தந்து வருகிறது. இது பாஜகவுக்கு சறுக்கலை தந்திருக்கிறது. அதிமுகவுடனான இந்த கூட்டணி முறிவை டெல்லி மேலிட தலைவர்களும் விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை என்பதே உண்மை.
ஆனால், அண்ணாமலை இதுகுறித்து எதுவுமே பேசவில்லை. அவரது மவுனம் பலவித சந்தேகங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாகவும், உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக – பாஜகவின் இந்த முடிவை பலர் ஆதரித்து வருகின்றனர். திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இந்த முடிவை வரவேற்று வாழ்த்து சொல்லி வருகிறார்கள். பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள், “இதெல்லாம் ஒரு டிராமா” என்று சொல்லி வருகிறார்கள்.
மேலும் சில தலைவர்களோ, இதை பற்றி கருத்தே சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். காரணம், தன்னுடைய நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்குமா? என்பது அவர்களின் சந்தேகம். இதற்கிடையில் பாஜகவை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தன் கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.
இவை எல்லாமே சேர்ந்து, அரசியல் களத்தில் ஒரு விவாதத்தை உண்டுபண்ணி வருகிறது. அதிமுக – திமுகவை, ஒரே புள்ளியில் நிறுத்தி பிரபல அரசியல் விமர்சகர் ஷ்யாம் பேசியிருப்பது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அதற்கு காரணம் அண்ணாமலை தான். வரும் 2026-ல், தமிழகத்தை ஆளப்போவது பாஜகதான் என்ற அண்ணாமலையின் பேச்சுதான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்துவிட்டது.
அதிமுக கூட்டணியில், தமிழ்நாடு எப்போதுமே தேசிய கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து வந்திருக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே தமிழகத்தின் தாரக மந்திரம்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் ஆட்சி என்றால் அதிமுக ஒப்புக் கொள்ளாது. காங்கிரஸ்தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றால் திமுகவும் ஒப்புக்கொள்ளாது. ஆக, திமுகவும் – அதிமுகவும் ஒரே புள்ளியில் அதாவது “பாஜக எதிர்ப்பு” என்ற புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இப்போதைக்கு இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதில் இருந்து மீள அண்ணாமலை என்ன வியூகம் அமைத்து செயல்படப் போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.
தற்போதைய சூழல்படி தேர்தல் நடந்தால் மும்முனை போட்டி நிச்சயம். ஆளும் திமுக கூட்டணிக்கே வெற்றி என்பதும் நிச்சயம்!