கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை, மழைநீர் வடிகால் கட்டுமானப்பணிகள், தார்சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேற்று (நவ.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83-க்கு உட்பட்ட திருச்சி சாலை, ஹைவேஸ் காலனி, சுந்தரேசன் லே-அவுட் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டார்.
அப்பகுதியிலுள்ள பொது மக்களிடம் குப்பை, மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சுந்தரேசன் லே-அவுட் பகுதிகளில் பொது மக்களிடம் குடிநீர் விநி யோகம் குறித்து கேட் டறிந்து, அப்பகுதியில் உள்ள மழைநீர் வடி காலை உடனடியாக தூர் வாரிட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட் டார்.
நமக்கு நாமே திட்டம்
வடக்கு மண்டலம் வார்டு எண்.3-க்கு உட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கழிப்பறைகளையும், பள்ளியின் சத்துணவு அறையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், வார்டு எண்.4-க்கு உட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்(TNSUDP) ரூ.174 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும், வார்டு எண்.10-க்கு உட்பட்ட ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளையும், “நமக்கு நாமே” திட்டத்தின்கீழ் வார்டு எண்.19-க்கு உட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளையும், வார்டு எண்.30-க்குட்பட்ட கணேஷ் லே-அவுட் பகுதியில் மாநக ராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவறைகள் கட்டுமானப் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடக்கு மண்டலம் வார்டு எண்.10-க்கு உட்பட்ட ஷாஜகான் நகரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அரசு சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா போட்டி களில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் பாராட்டு சான் றிதழ்களை வழங்கினார்.
வார்டு எண்.10-க்குட்பட்ட பூந்தோட்டம் நகரில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் செப்பனிடப்பட்ட சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின்போது, வடக்கு மண்டல தலை வர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, கவிதா, சரண்யா, மண்டல உதவி ஆணையர்கள் மகேஷ் கனகராஜ் (மத்தியம்), மோகனசுந்தரி (வடக்கு), உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் உத்தமன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.