தமிழ்மொழி சங்க காலத்தில் இருந்தே இலக்கண மற்றும் இலக்கிய வளம் கொண்டது என்று புகழாரம் சூட்டினார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்.
கோவை, ராசவீதி , துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (நவ.25) தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிக் திட்டச் செயலாக்கம் குறித்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கருத்தரங்கு நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் செயல்பாடுகளில் தலையானது ஆட்சிமொழிச் செயலாக்கம் ஆகும். ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிக் திட்டச் செயலாக்கம் குறித்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி இரண்டு நாள் நடைபெற்றது.
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது கையொப்பத்தினைத் தமிழிலேயே இட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அருமையான, இனிமையான, ஆளுமை உள்ள மொழி நம் தமிழ்மொழி.
ஒரு மொழி வளர்வதற்கு இலக்கிய வளம் அவசியம். நம்முடைய தமிழ்மொழி சங்க காலத்தில் இருந்தே இலக்கண மற்றும் இலக்கிய வளம் கொண்டது. தமிழுக்கு அழகு சிறப்பு “ழ” ஆகும்.
இதனை தெளிவாக இன்றைய தலைமுறையினர் கற்க வேண்டும். தமிழ்மொழியின் இலக்கிய வளத்தைப்போல் வேறு எந்தமொழியிலும் காண முடியாது. இவ்வளவு பெருமைவாய்ந்த நம்மொழியினை இன்றைய காலகட்டத்தில் நாம் கற்பதை பெருமையாக கருத வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2020-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தொண்டாமுத்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்குக் கேடயத்தையும், ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சிலம்பம் போட்டி-2022
தேசிய அளவில் பெங்களூரில் நடைபெற்ற சிலம்பம் போட்டி-2022ல் ஒற்றைகம்பு சுற்று மற்றும் இரட்டை கம்பு சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்ற கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இ.கே.அட்சயா , தனது பரிசினை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அ.புவனேசுவரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர் (பணி நிறைவு) முனைவர் க.சிவசாமி, இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்/முதல்வர் பெ.கிருட்டிணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.