fbpx
Homeதலையங்கம்ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிப்பது நியாயமா?

ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிப்பது நியாயமா?

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் மூன்று மாநில தேர்தலை ஒட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50ம், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் விலை ரூ.350.50ம் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சல் உண்டாக்கி இருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றி உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இடைவிடாமல் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், போதாக்குறைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் பண வீக்கத்தால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வதறியாது திகைத்து வரும் சூழலில் இந்த விலை உயர்வு பாமர மக்களின் தலையில் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது.

நாட்டு மக்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வாங்க வாய்ப்பிருந்தும் சராசரியாக 7 சிலிண்டர் மட்டுமே வழங்குகிறார்கள். இனிமேல் இந்த எண்ணிக்கையும் குறையும். சமையல் எரிவாயுவிற்கான மானியத் தொகையையும் முழுமையாக ஒன்றிய அரசு வழங்குவதில்லை.

எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் குறிப்பாக இல்லத்தரசிகளின் வேண்டுகோள்.
செவிமடுக்குமா ஒன்றிய பாஜக அரசு?

படிக்க வேண்டும்

spot_img